ஹல்த்வானி வன்முறை: 4 பேர் பலி, 100க்கும் மேற்பட்டோர் காயம்… அமலானது ஊரடங்கு உத்தரவு!

Haldwani violence

உத்தரகாண்ட் மாநில ஹல்த்வானி பகுதியில் ஆக்கிரமித்து சட்டவிரோதமாக கட்டப்பட்டு இருந்த மதராஸா இடிக்கப்பட்டதை தொடர்ந்து வன்முறை வெடித்துள்ளது. இந்த வன்முறையில் 4 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ஹல்த்வானி பகுதியில் இஸ்லாமியர்கள் பல ஆண்டுகளாக வசித்து வருவதாக கூறப்படுகிறது.

ஆனால், இஸ்லாமியர்கள் வசித்து வந்த பகுதி ரயில்வே துறைக்கு சொந்தமானது என கடந்த 2022ம் ஆண்டு டிசம்பர் மாதம் உத்தரகாண்ட் நீதிமன்றம் அறிவித்தது. இதனால், அங்கிருந்து அனைவரும் காலி செய்யவேண்டும், இல்லையென்றால் காலி செய்யப்படுவார்கள் என எச்சரிக்கை விடுத்ததாக கூறப்பட்டது. இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்த நிலையில் அந்த மனு விசாரணையில் உள்ளது.

இந்த சூழலில் ஹல்த்வானி பகுதியில் ஆக்கிரமித்து சட்டவிரோதமாக கட்டப்பட்டு இருந்த மதரஸாவை அகற்றும் பணி அரசு அதிகாரிகள் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டது. இதுதான் தற்போது வன்முறையாக வெடித்துள்ளது.  அதாவது, சட்டவிரோத ஆக்கிரமிப்புகளை அகற்றுவதாக கூறி ஹல்த்வானி பகுதியில் உள்ள மதராஸாவை நகராட்சி ஆணையர் பங்கஜ் உபத்யாய் முன்னிலையில் இடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பேஸ்புக் லைவ் வீடியோவில் முன்னாள் எம்.எல் ஏ மகன் சுட்டுக்கொலை..!

மதராஸாவை இடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியில் மக்கள் ஒன்று திரண்டனர். நேற்று நடைபெற்ற இந்த சம்பவத்தில் காவல்துறைக்கும், உள்ளூர் மக்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. ஆக்கிரமிப்பை அகற்ற வந்த அரசு அதிகாரிகள் மீது கற்களை வீசி தாக்குதலும், வாகனங்களுக்கு தீயும் வைக்கப்பட்டுள்ளது. இதனால், கூட்டத்தை கலைக்க கண்ணீர் புகை குண்டு வீசியதாக காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.

இந்த சம்பவத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்து உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. வன்முறை செயலில் ஈடுபடுபவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.  இந்த சூழலில், வன்முறை மேலும் பெரியதாக வெடிக்காமல் இருக்க அந்த பகுதியில் ஊரடங்கு உத்தரவும் அமலானது. அதன்படி, இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது.

மேலும் இணைய சேவை துண்டிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, ஆக்கிரமிப்பு அகற்றம் தொடர்பான வழக்கின் அடுத்தகட்ட விசாரணை வரும் 14-ம் தேதி நடைபெற உள்ளது. அதேசமயம் நாட்டிலேயே முதல் முறையாக, உத்தராகண்ட் சட்டப்பேரவையில் பொது சிவில் சட்ட மசோதா சமீபத்தில் நிறைவேற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்