ஹலால் சான்றிதழ் .! பாஜக எம்எல்ஏ சர்ச்சை கருத்து.!
இஸ்லாமிய மத சட்ட விதிமுறைப்படி மாமிச உணவுகளாக கொல்லப்படும் கால்நடைகளுக்கு , உணவு பொருட்களுக்கு ஹலால் சான்றிதழ் வழங்கப்படும். இதனை ஒருசில இஸ்லாமிய அமைப்புகள் வழங்குகின்றன. இதற்கு கட்டணங்கள் வசூல் செய்யப்படுகின்றன. இந்த ஹலால் சான்றிதழ் உத்திர பிரதேசசத்தில் தடை செய்யப்பட்டுள்ளது.
உத்திர பிரதேசத்தில் ஹலால் சான்றிதழ் தடை செய்யப்பட்டது போல மகாராஷ்டிராவிலும் ஹலால் சான்றிதழ் தடை செய்யப்பட வேண்டும் என மகாராஷ்டிரா பாஜக எம்எல்ஏ நித்தேஷ் ரானே தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், ஹலால் சான்றிதழுக்காக சேகரிக்கப்பட்ட பணம் பயங்கரவாதத்திற்கு பயன்படுத்தப்படுகிறது எனவும் குற்றம் சாட்டினார்.
மேலும் இது குறித்து அவர் பேசுகையில், ஹலால், ஜிஹாத், லவ் ஜிஹாத் ஆகிய இஸ்லாமிய சட்டங்கள் பெரிய கவலையை அளிக்கிறது. ஹலால் சான்றிதழ் என்ற பெயரில் சேகரிக்கப்படும் பணம் சட்டவிரோத செயல்களுக்கு பயன்படுத்தப்படுகிறது. இது இந்து மதத்திற்கு எதிராக பயன்படுத்தப்படுகிறது. இது தொடர்பான அனைத்து ஆதாரங்களும் எங்களிடம் உள்ளன. உத்தரபிரதேச அரசு ஹலால் சான்றிதழை தடை செய்ததை போல மகாராஷ்டிராவிலும் தடை செய்யப்பட வேண்டும். அதுபற்றி நான் தொடர்ந்து குரல் கொடுப்பேன என்றும்,
ஹலால் சான்றிதழ் வழங்கும் இரண்டு நிறுவனங்கள் மகாராஷ்டிராவை சேர்ந்தவை. இரண்டு நிறுவனங்களையும் தடை செய்ய வேண்டும். இது தொடர்பாக முதல்வர் மற்றும் துணை முதல்வருக்கு கடிதம் எழுத உள்ளேன் என்றும் பாஜக எம்எல்ஏ நித்தேஷ் ரானேதெரிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேச அரசு கடந்த நவம்பர் 18 அன்று ஹலால் சான்றிதழுடன் கூடிய உணவு, மருந்துகள் மற்றும் அழகுசாதனப் பொருட்களின் உற்பத்தி, சேமிப்பு, விநியோகம் மற்றும் அதன் விற்பனைக்கும் தடை விதித்தது. உணவு பொருட்களின் தரத்தை முடிவு செய்யும் உரிமை, உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயச் சட்டம், 2006ன் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள அதிகாரிகளுக்கு மட்டுமே உள்ளது என ஆணையரின் உத்தரவில் கூறப்பட்டுள்ளது.