ஹஜ் பயணம்.., இந்தியாவில் இருந்து 5,000 பேருக்கு மட்டுமே அனுமதி..?
கொரோனா 2-ஆம் அலையின் காரணமாக ஹஜ் பயணம் மேற்கொள்ள இந்தியாவில் இருந்து 5,000 பேருக்கு மட்டுமே அனுமதி கிடைக்கும் வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வரும் ஜூலை மாதம் 60,000 ஹஜ் பயணிகளை மட்டுமே அனுமதிக்க சவுதி அரேபிய அரசு முடிவு செய்து உள்ளது. இதில் உள்நாட்டை சேர்ந்த 15 ஆயிரம் பேரையும், பிற நாடுகளை சேர்ந்த 45 ஆயிரம் பயணிகளையும் அனுமதிக்க சவுதி திட்டமிட்டுள்ளது. இதனால், இந்தியாவில் 5 ஆயிரம் பேர் ஹஜ் பயணம் மேற்கொள்ள வாய்ப்பு உள்ளதாக மத்திய ஹஜ் கமிட்டி தெரிவித்தாக தகவல் வெளியாகியுள்ளது.
மாநிலம் வாரியாக எவ்வளவு பயணிகள் அனுமதிக்கப்படுவர் என்ற விவரம் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை. இந்தியாவில் வழக்கமாக ஒரு லட்சத்திற்கு மேற்பட்டவர்கள் ஹஜ் பயணம் மேற்கொள்வார்கள். அதன்படி கடந்த 2019- ஆம் ஆண்டு ஒரு லட்சத்து 75 ஆயிரம் பேர் இந்தியாவில் இருந்து ஹஜ் பயணம் மேற்கொண்டனர்.
இந்த ஆண்டு 18 வயதுக்கு குறைவானோர் மற்றும் 60 வயதுக்கு மேல் உள்ளோரை அனுமதிக்கப்போவதில்லை என்றும் கடந்த 6 மாதங்களில் மருத்துவமனைகளில் எந்த நோய்க்காகவும் அனுமதிக்கப்படாத அவர்கள் மட்டுமே ஹஜ் பயணம் மேற்கொள்ள அனுமதிக்கப்படுவர் என்றும் ஹஜ் கமிட்டி தெரிவித்துள்ளது.