தலைமை தேர்தல் அதிகாரியாக ஞானேஷ் குமார் பொறுப்பேற்பு.!
இப்போது தேர்தல் ஆணையத்தில், ஞானேஷ் குமார் தலைமைத் தேர்தல் ஆணையராகவும், எஸ்.எஸ். சந்து தேர்தல் ஆணையராகவும், விவேக் ஜோஷி தேர்தல் ஆணையராகவும் உள்ளனர்.

டெல்லி : புதிய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பொறுப்பேற்றுக் கொண்டார். தலைமைத் தேர்தல் ஆணையராக இருந்த ராஜுவ்குமார் நேற்றுடன் பணி நிறைவு செய்தார். இந்த நிலையில், டெல்லியில் உள்ள தலைமைத் தேர்தல் ஆணைய அலுவலகத்தில் தேர்தல் ஆணையர் சுக்பீர் சிங் சந்து அவரை வரவேற்றார்.
ஞானேஷ்குமாரின் நியமனத்திற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இதனிடையே, தேர்தல் ஆணையர்கள் நியமன சட்டத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை இன்று நடக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
2029ஆம் ஆண்டு ஜன. 26-ஆம் தேதி வரை ஞானேஷ் குமாரை ஆணையராக பதவி வகிப்பார். இப்போது தேர்தல் ஆணையத்தில், ஞானேஷ் குமார் தலைமைத் தேர்தல் ஆணையராகவும், எஸ்.எஸ். சந்து தேர்தல் ஆணையராகவும், விவேக் ஜோஷி தேர்தல் ஆணையராகவும் உள்ளனர். ஞானேஷ் குமார் 1988 ஆம் ஆண்டு கேரள கேடர் அதிகாரி ஆவார்.
1964-ம் ஆண்டு ஜனவரி 27-ம் தேதி உத்தர பிரதேசத்தின் கான்பூரில் பிறந்த இவர், தேர்தல் ஆணையத்தில் நியமிக்கப்படுவதற்கு முன்பு, மத்திய பாதுகாப்பு அமைச்சகம், உள்துறை அமைச்சகம், நாடாளுமன்ற விவகார அமைச்சகம் மற்றும் கூட்டுறவு அமைச்சகத்தில் இணைச் செயலாளராகவும் பின்னர் செயலாளராகவும் பணியாற்றியுள்ளார். கேரள அரசின் பல்வேறு துறைகளிலும் உதவி ஆட்சியர் பதவி முதல் செயலாளர் பதவி வரை பணியாற்றிருக்கிறார் ஞானேஷ் குமார்.
2019-ம் ஆண்டு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டபோது மத்திய உள்துறையின் கூடுதல் செயலாளராக பணியாற்றினார். அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்காக அமைக்கப்பட்ட ராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையை நிறுவ முக்கிய பங்கு வகித்தார்.