நேற்று இரவு கரையை கடந்தது குலாப் புயல் – 2 பேர் உயிரிழப்பு…!
வங்கக்கடலில் உருவாகிய குலாப் புயல் நேற்று இரவு ஆந்திராவின் வடக்குப் பகுதி மற்றும் தெற்கு ஒடிசா இடையே கரையை கடந்தது.
கிழக்கு மத்திய வங்கக் கடலில் கடந்த இரு தினங்களுக்கு முன் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று வட மேற்கு மற்றும் மத்திய மேற்கு வங்கக் கடலில் நிலை கொண்டிருந்தது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக உருவாகும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், ஆந்திரா மற்றும் ஒடிசா இடையே இந்த குலாப் புயல் கரையை கடக்கும் என தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் நேற்று இரவு மணிக்கு 95 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்றுடன் ஆந்திராவின் வடக்கு பகுதி மற்றும் தெற்கு ஒடிசா இடையே குலாப் புயல் கரையை கடந்தது. இதனால் பல மரங்கள் மற்றும் மின் கம்பங்கள் வேரோடு சாய்ந்தது. பல்வேறு மாவட்டங்களிலும் இதன் காரணமாக கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இந்த குலாப் புயல் கரையை கடக்கும் பொழுது வேகமாக வீசிய காற்றின் காரணமாக ஆந்திர மீனவர்கள் சென்ற படகு கவிழ்ந்ததில், அந்த படகில் இருந்த 6 மீனவர்கள் கடலில் விழுந்தனர், அதில் மூன்று பேர் மீட்கப்பட்ட நிலையில், 2 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.