குஜராத் அரசு பயனற்றது – ஜாமினில் வெளியேறிய ஜிக்னேஷ் மேவானி பேச்சு..!
குஜராத் மாநில இளம் தலித் தலைவரும், ராஷ்ட்ரிய தலித் அதிகார மஞ்ச் எனும் அரசியல் கட்சியின் ஒருங்கிணைப்பாளருமாகியவர் தான் ஜிக்னேஷ் மேவானி. இவர் பாதிக்கப்படக்கூடிய தலித் சமூக மக்களுக்காக போராட்டத்தில் ஈடுபட்டு பெருமளவில் மக்கள் மத்தியில் அறியப்பட்ட ஒரு அரசியல்வாதியாக இருந்து வருகிறார்.
காங்கிரஸ் ஆதரவுடன் கடந்த 2017 ஆம் ஆண்டு வாக்கெட் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்ட மேவானி 84 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குகள் பெற்று வெற்றி பெற்றிருந்தார். இவர் தொடர்ந்து பிரதமர் மோடி குறித்தும், பாஜக கட்சி குறித்தும் தனது கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்.
அந்த வகையில் கடந்த மதம் பிரதமர் மோடியை கோட்சேவுடன் ஒப்பிட்டு பேசியதற்காகவும், காவல்துறையினரை மதிக்காமல் நடந்து கொண்டதற்காகவும் இருமுறை கைது செய்யப்பட்டார். அசாமிலிருந்து ஜாமினில் வெளியில் வந்துள்ள மேவானி நேற்று குஜராத் வந்தடைந்தார்.
அப்பொழுது பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய அவர், குஜராத் மாநில காங்கிரஸ் தலைவர் ஜெகதீஷ் தாக்கூர், அர்ஜூன் மோத்வாடியா, அமித் சாவ்தா போன்ற மூத்த தலைவர்கள் கலந்துகொண்ட கூட்டத்தில் ஒரு எம்.எல்.ஏ வை அசாமுக்கு அழைத்து சென்றது குஜராத்திலுள்ள 6.5 கோடி மக்களுக்கு அவமானம் என பேசியுள்ளார்.
மேலும், குஜராத் மாநிலத்தில் ஆளும் பாஜக அரசு பயனற்றது இதற்காக குஜராத் அரசு வெட்கப்பட வேண்டும் என கூறியுள்ளார். மேலும், மாநிலத்தில் நடக்கும் போராட்டங்களுக்காக தலித் மக்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டால் ஜூன் ஒன்றாம் தேதி குஜராத் பந்த் நடத்தப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.