குஜராத் தேர்தல்: முதலமைச்சர் கூட்டத்தில் காளை மாட்டை அவிழ்த்து விட்ட பாஜக!
காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபட்ட ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் கூட்டத்தில் காளை மாட்டை அவிழ்த்து விட்ட பாஜக.
குஜராத் மாநிலத்தில் மொத்தமுள்ள 182 இடங்களில் சட்டசபை தேர்தல் 2 கட்டங்களாக டிசம்பர் 1 மற்றும் 5ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது. முதற்கட்டமாக டிச. 1ம் தேதி 89 தொகுதிகளுக்கும், 2 கட்டமாக 93 தொகுதிகளுக்கும் சட்டப்பேரவை தேர்தல் நடத்தப்பட உள்ளது. டிசம்பர் 1-ஆம் தேதி முதற்கட்டமாக நடைபெறும் 89 தொகுதிகளுக்கான தேர்தல் பிரச்சாரம் இன்று மாலை உடன் நிறைவடைய உள்ள நிலையில், முக்கிய தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆளும் கட்சியான பாஜக மீண்டும் ஆட்சி அதிகாரத்தில் அமர தீவிர முயற்ச்சியில் ஈடுபட்டு வரும் நிலையில், எப்படியாவது குஜராத்தில் பாஜகவின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்த வேண்டும் என காங்கிரஸ் மறுபக்கம் போட்டி பிரச்சாரம் செய்து வருகிறது. பாஜக – காங்கிரஸ் என இரு முனை போட்டி என்றாலும், டெல்லி, பஞ்சாபை தொடர்ந்து, குஜராத்திலும் ஆம் ஆத்மி களமிறங்கியிருப்பது மேலும் எதிர்பார்ப்பை அதிகரிக்க வைத்துள்ளது.
இதனை காரணமாக மூன்று கட்சிகளும் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளது. இதனிடையே, சுவாரஸ்யமான நிகழ்வு ஒன்று நடந்துள்ளது. அதாவது, குஜராத் சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு, மெஹ்சானாவில் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபட்ட ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் கூட்டத்தில் காளை மாட்டை அவிழ்த்து விட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது. இது பாஜகவின் செயல் என்று காங்கிரஸ் கட்சியினர் குற்றசாட்டுகின்றனர்.
காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து ராஜஸ்தான் முதலமைச்சர் பிரசார கூட்டத்தில் காளை மாட்டை அவிழ்த்து விட்டதில் தொண்டர்கள் சிதறியடித்து ஓடியதால் பரபரப்பான சூழல் ஏற்பட்டது. கூட்டத்திற்கு இடையூறு விளைவிக்க காளை மாட்டை அனுப்பியுள்ளது பாஜக என்று முதலமைச்சர் அசோக் கெலாட் கூறினார். தேர்தலுக்கு முன், எங்கள் கூட்டங்களுக்கு இடையூறு விளைவிக்க இதுபோன்ற தந்திரங்களை பாஜக கையாளும் என்றும் மக்கள் அமைதியாக இருந்தால், மாடு தானே வெளியேறும் எனவும் கூறியுள்ளார். இந்த சம்பவத்தின் வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
Uninvited member at Ashok Gehlot’s rally in Mehsana. pic.twitter.com/8krHjAney2
— News Arena India (@NewsArenaIndia) November 28, 2022