இஸ்லாமியர்களை கட்டிவைத்து அடித்த போலீசார்.! 11 போலீசாருக்கு நோட்டிஸ் அனுப்பிய உயர்நீதிமன்றம்.!
கிராமத்தில் நடைபெற்ற திருவிழாவின் போது ஏற்பட்ட பிரச்சனையை அடுத்து இஸ்லாமியர்கள் சிலரை குஜராத் போலீசார் கட்டி வைத்து அடித்துள்ளனர். அதற்கு பதில் கேட்டு குஜராத் உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
கடந்த அக்டோபர் 3ஆம் தேதி அன்று குஜராத் மாநிலத்தில் கேடா எனும் மாவட்டத்தில் உந்தெலா கிராமத்தில் திருவிழா நடைபெற்றது. இதில் இரு தரப்பினர் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது.
இந்த மோதல் சம்பவத்தை தொடர்ந்து, அந்த பகுதியில் இருந்த இஸ்லாமியர்கள் சிலரை காவல்துறையினர் அழைத்துவந்து ஒரு கம்பத்தில் கட்டி வைத்து அடித்துள்ளனர்.
இதனை விடியோவாக எடுத்து சமூக ஊடகங்களிலும் யாரோ பதிவிட்டனர். அந்த விடியோவும் வைரலானது. இதில் பாதிக்கப்பட்ட 5 இஸ்லாமியர்கள் குஜராத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தனர்.
இதனை விசாரித்த உயர்நீதிமன்றம் தாக்குதல் நடத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட 11 காவலர்கள் மற்றும் குஜராத் மாநில அரசுக்கு இந்த சம்பவம் குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
மனுதார்கள் சார்பில் காவல்துறையினர் கட்டி வைத்து அடித்தது மட்டுமல்லாமல் அதை வீடியோவாக எடுத்து, சமூக ஊடகங்களில் காவல்துறையினரே பகிர்ந்ததாகவும் குற்றம் சாட்டியுள்ளனர்.