பெட்ரோல், டீசலுக்கும் இனி ஜிஎஸ்டி ( GST )
உலக சந்தையில் கச்சா எண்ணையின் விலை உயர்வைக் காரணம் காட்டி பெட்ரோல், டீசல் விலைகள் தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருகிறது. சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 22 காசுகள் உயர்ந்து ரூ.80.37 ஆகவும் . டீசல் விலை லிட்டருக்கு 16 காசுகள் குறைந்து ரூ.72.40 ஆகவும் விற்பனை செய்யப்படும் என்று எண்ணை நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலுக்காக கடந்த ஏப்ரல் மாதம் 24-ஆம் தேதி முதல் மே மாதம் 13-ஆம் தேதி வரை பெட்ரோல், டீசல் விலை உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அதன்பின் மே 13-ஆம் தேதி முதல் தொடர்ந்து எரிபொருட்களின் விலை உயர்த்தப்பட்டு வருகிறது.
எரிபொருட்களின் விலைகளை தினமும் மாற்றும் முறை அறிமுகம் செய்யப்பட்டது முதல் இன்று வரை தினமும் எரிபொருட்களின் விலைகள் மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது. இதற்கு நாடு முழுவதுமுள்ள மக்கள் பெட்ரோல் டீசல் விலையை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவர மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்து வருகின்றனர்.
இந்நிலையில், பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவர மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஆதரவு தெரிவித்துள்ளார். மேலும் பெட்ரோல், டீசல் விற்பனையை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வருவதன் மூலம் விலை உயர்வை கட்டுப்படுத்த முடியும் என்று கூறியுள்ளார்.
இந்த திட்டம் எப்போது நடைபெறும் என்பதை மட்டும் தற்போது கூற இயலாது என்று தெரிவித்துள்ளார். மேலும் மத்திய அரசு இந்த திட்டத்தை கொண்டு வர முடிவு செய்தாலும், தற்போது பெட்ரோல் டீசலுக்கு வரி மூலம் பெரிய அளவில் வருவாய் கிடைப்பதால் ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வர மாநில அரசுகள் எதிர்க்கின்றன என்று தெரிவித்துள்ளார்.