குரூப் கமாண்டோ வருண் சிங் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது..?
ஹெலிகாப்டர் விபத்தில் படுகாயமடைந்த குரூப் கமாண்டோ கேப்டன் வருண் சிங் உடல் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த புதன்கிழமை குன்னூர் வெலிங்டனில் உள்ள இந்திய ராணுவ பயிற்சி கல்லூரி கட்டிட திறப்பு விழாவில் பங்கேற்க முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா உட்பட 14 பேர் கோவை சூலூர் விமானப்படைத் தளத்தில் இருந்து வெலிங்டன் ராணுவ முகாமிற்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது காட்டேரி நஞ்சப்பாசத்திரம் பகுதியில் உள்ள வனப்பகுதியின் மேலே பறந்து சென்று கொண்டிருந்த போது ஹெலிகாப்டர் கட்டுப்பாட்டை இழந்த கீழே விழுந்து தீ பிடித்து எரிந்தது.
இந்த விபத்தில் ராணுவ முப்படை தளபதி பிபின் ராவத் அவரது மனைவி உள்பட 13 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். காட்டேரில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் படுகாயமடைந்த குரூப் கமாண்டோ கேப்டன் வருண் சிங் விபத்திற்குப் பிறகு 80 சதவீத தீ காயங்களுடன் வெலிங்டனில் (தமிழ்நாடு) ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக பெங்களூருவில் உள்ள கமாண்ட் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
பெங்களூரு ராணுவ மருத்துவமனையில் உயர் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ள நிலையில் உடல் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாகவும் தொடர்ந்து அவருக்கு மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்து வருகின்றனர் என தகவல் வெளியாகியுள்ளது.
வருண் சிங்கின் தந்தை நேற்று, தனது மகன் ஒரு போர்வீரன் என்பதால் குணமடைந்து மருத்துவமனையில் இருந்து வெளியே வருவார் என்று கூறினார். குரூப் கேப்டன் வருணுக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் சௌர்ய சக்ரா விருது வழங்கப்பட்டது. குரூப் கேப்டனை காப்பாற்ற அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மக்களவையில் கடந்த வியாழக்கிழமை தெரிவித்தார்.