“ரூ 52,00,00,00,00,00,00 யை சொத்தாக வைத்திருக்கும் 831 இந்தியர்கள்”மொத்த உள்நாட்டு உற்பத்தியில் நான்கில் ஒருபங்கை விட அதிகம்..!!
இந்தியாவில் 831 நபர்கள் வைத்திருக்கும் சொத்து மட்டும் 52 லட்சம் கோடி ரூபாய் என்றும், இது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் நான்கில் ஒருபங்கை விட அதிகம் என்றும் மலைக்க வைக்கும் தகவல் வெளியாகியுள்ளது.
உலகப் பணக்காரர்களின் சொத்து விவரங்கள் குறித்து, ‘பார்க்லேஸ் ஹூரன்’ என்ற பிரபல ஆய்வு நிறுவனம் வெளியிட்ட அறிக்கையிலேயே இந்த விவரங்கள் வெளியிடப்பட்டு உள்ளன.
“இந்தியாவில் 1,000 கோடி ரூபாய்க்கும் அதிகமாக சொத்து வைத்திருப்பவர்களின் எண்ணிக்கை 34 சதவிகிதம் அதிகரித்துள்ளது; 2018-ஆம் ஆண்டுக் கணக்குப்படி இந்தியாவில் 831 பேர், 1000 கோடி ரூபாய்க்கும் அதிகமாக சொத்து வைத்துள்ளனர்; இவர்களின் மொத்த சொத்து மதிப்பு 52 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது. இது இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் (ஜிடிபி) நான்கில் ஒரு பங்கைக் காட்டிலும் அதிகமாகும்.
ஆயிரம் கோடிக்கு அதிகமான சொத்துக்களை வைத்திருப்போரின் பட்டியலில், இந்தாண்டு மட்டும் 214 பேர் புதிதாக இணைந்துள்ளனர். அதாவது ஆயிரம் கோடிக்கும் அதிகமான சொத்து வைத்திருப்போரின் எண்ணிக்கை 34 சதவிகிதம் அதிகரித்துள்ளது.
இப்பட்டியலில் மும்பையைச் சேர்ந்த அதிக பணக்காரர்களே அதிகம் உள்ளனர். மும்பையில் மட்டும் 233 பேர் 1000 கோடி ரூபாய்க்கும் அதிகமான சொத்து வைத்துள்ளனர். ஆசியாவின் குடிசைகள் நிறைந்த பெரிய நகரமும் மும்பைதான்; பணக்காரர்கள் நிறைந்த நகரமும் மும்பையாகத்தான் உள்ளது.அதேபோல தில்லியில் 163 பேரும், பெங்களூருவில் 70 பேரும் 1000 கோடிக்கு ரூபாய்க்கும் அதிகமாக சொத்து வைத்துள்ளனர்.இந்தப் பட்டியலில் புதிதாக இடம் பிடித்துள்ளவர்களில் 59 சதவிகிதம் பேர் மும்பையைச் சேர்ந்தவர்கள். 163 பேர் பெண்கள்.
துறைவாரியாக எடுத்துக் கொண்டால், 1000 கோடி ரூபாய்க்கு மேல் சொத்து வைத்துள்ளவர்களில் 13.7 சதவிகிதம் பேர் மருத்துவத் துறையைச் சேர்ந்தவர்களாகவும், மென்பொருள் மற்றும் சேவைத் துறையினர் 7.9 சதவிகிதம் பேரும் உள்ளனர். ஒட்டுமொத்தமாக ஒரே ஆண்டில் 9 பேரின் சொத்து மதிப்பு இருமடங்காக உயர்ந்துள்ளது. குறிப்பாக கிராபைட் கிருஷ்ண பங்கூரின் சொத்து மதிப்பு 430 சதவிகிதம் அதிகரித்துள்ளது.”
இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
DINASUVADU