மேகதாது விவகாரம்:சந்திக்க நேரம் வழங்க வேண்டும்…!முதல்வர் பழனிசாமிக்கு கர்நாடக நீர்பாசன அமைச்சர் கடிதம்…!
கர்நாடக நீர்பாசன அமைச்சர் டி.கே.சிவக்குமார் மேகதாது அணை தொடர்பாக முதல்வர் பழனிசாமிக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் ரூ.5,912 கோடி செலவில் புதிய அணை கட்ட கர்நாடக அரசு தீவிரம் காட்டி வருகிறது. இதற்கான சாத்தியக்கூறு அறிக்கையை மத்திய நீர்வள ஆணையத்திடம் தாக்கல் செய்த கர்நாடக அரசு, அணை கட்டுவதற்கான அனுமதி கோரியது. இந்த அறிக்கையை ஏற்றுக்கொண்ட மத்திய நீர்வள ஆணையம், இதற்கான விரிவான திட்ட அறிக்கையை தயாரித்து அளிக்குமாறு கர்நாடக நீர்பாசனத்துறைக்கு உத்தரவிட்டது. இந்த அனுமதிக்கு எதிராக தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்நிலையில் கர்நாடக நீர்பாசன அமைச்சர் டி.கே.சிவக்குமார் மேகதாது அணை தொடர்பாக முதல்வர் பழனிசாமிக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.அதில் மேகதாது திட்டம் குறித்து விவாதிக்க தங்களை சந்திக்க நேரம் வழங்க வேண்டும் என தமிழக முதல்வர் பழனிசாமிக்கு கர்நாடக நீர்பாசன அமைச்சர் டி.கே.சிவக்குமார் கோரிக்கை விடுத்துள்ளார். மேகதாது விவகாரத்தை சுமுகமாக பேசித்தீர்க்க கர்நாடகஅரசு விரும்புகிறது. காவிரி பிரச்னைக்கு நிரந்தரத்தீர்வு காண கர்நாடக அரசும், மக்களும் விரும்புகிறோம். மேகதாதுவில் அணை கட்டப்பட்டால் கடலில் கலக்கும் மேட்டூர் அணை உபரிநீரை தடுக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார்.