ஜிஎஸ்டி இழப்பீடு தொகை : மாநிலங்களுக்கு 17-வது தவணையாக ரூ.5,000 கோடி விடுவிப்பு
ஜிஎஸ்டி வரி இழப்பீட்டை மாநிலங்கள் எதிர்கொள்வதற்கான 17-வது தவணையாக ரூ. 5,000 கோடியை மாநில அரசுகளுக்கு மத்திய நிதியமைச்சகம் வழங்கியுள்ளது.
இது தொடர்பாக மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜிஎஸ்டி வரி இழப்பீட்டை மாநிலங்கள் எதிர்கொள்வதற்கான 17-வது தவணையாக ரூ. 5,000 கோடியை மாநில அரசுகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதில், ரூ. 4,730.41 கோடி 23 மாநிலங்களுக்கும், ரூ. 269.59 கோடி ஜிஎஸ்டி கவுன்சிலில் உறுப்பினர்களாக உள்ள சட்டசபையுடன் கூடிய மூன்று யூனியன் பிரதேசங்களுக்கும் (டெல்லி , ஜம்மு & காஷ்மீர் மற்றும் புதுச்சேரி) வழங்கப்பட்டுள்ளது.மீதமுள்ள ஐந்து மாநிலங்களான அருணாச்சலப் பிரதேசம், மணிப்பூர், மிசோரம், நாகலாந்து மற்றும் சிக்கிமுக்கு சரக்கு மற்றும் சேவை வரி முறையை செயல்படுத்தியதால் எந்த விதமான வருவாய் இழப்பும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மதிப்பிடப்பட்ட மொத்த ஜிஎஸ்டி இழப்பீட்டு நிதியில் 91 சதவீதம், மாநிலங்களுக்கும் , சட்டசபையுடன் கூடிய யூனியன் பிரதேசங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது.
இதில் ரூ. 91,460.34 கோடி மாநிலங்களுக்கும், ரூ. 8,539.66 கோடி சட்டசபையுடன் கூடிய மூன்று யூனியன் பிரதேசங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது.இந்த வாரத்திற்கான நிதி 5.5924 சதவீதம் என்னும் வட்டி விகிதத்தில் கடனாக வாங்கப்பட்டுள்ளது. இது வரை, ரூ. 1,00,000 கோடி, 4.8307 சதவீதம் என்னும் சராசரி வட்டி விகிதத்தில் மத்திய அரசால் கடனாக வாங்கப்பட்டுள்ளது.மத்திய அரசு தெரிவித்த விருப்பத் திட்டங்களில் முதலாம் விருப்பத் திட்டத்தை அனைத்து மாநிலங்களும் விரும்பின. இதைத் தொடர்ந்து, மொத்த மாநில உற்பத்தியில் 0.50 சதவீதம் அளவுக்கு ரூ. 1,06,830 கோடியைக் கூடுதல் கடனாகப் பெற்றுக் கொள்ளவும் மாநிலங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.மேலும், தமிழகம், மாநில மொத்த உற்பத்தியில் 0.50 சதவீத அளவுக்கு ரூ.9627 கோடியும், சிறப்பு ஏற்பாட்டின் மூலம் வெளிச்சந்தையில் ரூ.6002.53 கோடியும், புதுச்சேரி சிறப்பு ஏற்பாட்டின் மூலம் வெளிச்சந்தையில் ரூ.713.61 கோடியும் கூடுதலாக கடன் திரட்ட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.