மருத்துவர்கள் போராட்டத்தால் 23 நோயாளிகள் உயிரிழப்பு.! மேற்கு வங்க அரசு குற்றசாட்டு.!
கடந்த 1 மாத காலத்தில் மாநிலத்தில் மருத்துவர்கள் நடத்திய போராட்டத்தால் இதுவரை 23 பேர் உயிரிழந்துள்ளனர் என மேற்கு வங்க அரசு உச்சநீதிமன்றத்தில் கூறியுள்ளது.
கொல்கத்தா : கடந்த ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி கர் மருத்துக்கல்லூரி, மருத்துவமனையில் 31 வயதான பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். நாட்டையே உலுக்கிய இந்த சம்பவம் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையில் நடைபெற்று வருகிறது.
இன்று நடைபெற்ற விசாரணையின்போது , இந்த வழக்கை விசாரணை செய்து வரும் சிபிஐ தங்கள் விசாரணை அறிக்கையை இன்று தாக்கல் செய்துள்ளனர். தற்போது வரையில் என்ன விசாரணை நடைபெற்றுள்ளது. அடுத்தகட்ட நடவடிக்கை குறித்தும் அந்த விசாரணை அறிக்கையில் சிபிஐ குறிப்பிட்டுள்ளது.
இந்த வழக்கில் மேற்கு வங்க மாநில அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபில் ஆஜராகினர். அவர் வாதிடுகையில், கடந்த ஒரு மாத காலமாக மருத்துவர்கள் போராடி வருவதால், மாநிலத்தில் இதுவரை 23 நோயாளிகள் உயிரிழந்துள்ளனர் என மாநில அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன் பின்னர், சிபிஐ விசாரணை அறிக்கை குறித்து தலைமை நீதிபதி அமர்வு கூறுகையில், பிற்பகல் 1.47 மணிக்கு பயிற்சி மருத்துவர் இறப்பு உறுதியாகியுள்ளது. பிற்பகல் 2.55 மணிக்கு காவல்துறையினரால் வழக்கு பதியப்பட்டுள்ளது. அந்த அறிக்கையின்படி இரவு 8.30 மணி முதல் 10.45 மணிக்குள் பயிற்சி மருத்துவர் உயிரிழந்திருக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. மேலும், 27 நிமிடங்கள் ஓடும் 4 சிசிடிவி வீடியோக்கள் சிபிஐக்கு விசாரணைக்காக தரப்பட்டுள்ளன என்றும் இன்றைய விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளன.