கொரோனா வைரஸ் 2 வது அலை பரவுவதற்கு 5ஜி நெட்வொர்க்கின் கதிர்வீச்சுதான் காரணமா?
கொரோனா வைரஸ் 2 வது அலை பரவுவதற்கு 5ஜி நெட்வொர்க்கின் கதிர்வீச்சு காரணம் என சமூகவலைதளங்களில் வெளியாகும் தகவல் உண்மை இல்லை இன்று மத்திய தகவல் தொலைத்தொடர்பு துறை தெரிவித்துள்ளது.
மத்திய அரசானது 5ஜி சோதனை செய்ய 13 நிறுவனங்களுக்கு அனுமதி அளித்துள்ளது என்று கடந்த சில மாதங்களுக்கு முன்பு தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில்,கொரோனா வைரஸின் 2 வது அலை பரவுவதற்கு 5 ஜி நெட்வொர்க்கின் பரிசோதனையே காரணம்.ஏனெனில்,அதில் இருந்து வெளியாகும் கதிர்வீச்சு காற்றை நச்சுத்தன்மை உடையதாக மாற்றுகிறது.இந்த காற்றை சுவாசிக்கும் மக்கள் வாய், மூக்கு வறண்டு, உடலில் ரத்த உறைவு ஏற்பட்டு உயிரிழக்கின்றனர்.
அதுமட்டுமல்லாமல்,4ஜி நெட்வொர்க்கினால் பறவைகள் எப்படி அதிகளவில் இறந்ததோ,அதனைப்போல் 5ஜி நெட்வொர்கின் கதிர்வீச்சு மனிதர்களையும், விலங்குகளையும் பாதிக்கிறது.எனவே,5ஜி நெட்வொர்க்கை எதிர்த்து அனைவரும் ஒன்றாக போராட வேண்டும் என்று பல தவறான செய்திகள் பரப்பப்படுவதாக மத்திய தகவல் தொலைத் தொடர்புத் துறை (டிஓடி) எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதனையடுத்து, மத்திய தகவல் தொலைத் தொடர்புத் துறை (டிஓடி) அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிக்கையின் படி,”கொரோனா வைரஸின் 2 வது அலை பரவுவதற்கு 5 ஜி நெட்வொர்க்கின் பரிசோதனையே காரணம் என்று சமூக ஊடகங்களில் பரவும் தகவல் முற்றிலும் தவறானவை.ஏனெனில்,5 ஜி தொழில்நுட்பத்திற்கும் கொரோனா இரண்டாம் அலை பரவலுக்கும் எந்த தொடர்பும் இல்லை.இந்த தவறான தகவல்கள் மற்றும் வதந்திகளால் மக்கள் தவறாக வழிநடத்தப்பட வாய்ப்புள்ளது. மேலும்,5 ஜி நெட்வொர்க்கின் சோதனை இந்தியாவில் இதுவரை எங்கும் தொடங்கப்படவில்லை.எனவே,5 ஜி சோதனைகள் இந்தியாவில் கொரோனா வைரஸை ஏற்படுத்துகின்றன என்ற கூற்று ஆதாரமற்றது மற்றும் தவறானது.
மேலும்,இதுவரை உள்ள மொபைல் கோபுரங்கள் குறைந்த ரேடியோ அதிர்வலைகளையே வெளிப்படுத்துகின்றன.இதனால்,அவை மனிதர்கள் மற்றும் பிற உயிரினங்களுக்கு எந்தவிதமான பாதிப்பையும் ஏற்படுத்தாது”,என்று தெரிவித்திருந்தது.