அரசு ஊழியர்கள் தேவையில்லாத செலவுகளை குறைக்க வேண்டும் : கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி .
அரசு ஊழியர்கள் தேவையில்லாத செலவுகளை குறைக்குமாறு கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.
அம்மாநிலத்தில் பல்வேறு அரசு அலுவலகங்கள் சார்பில் புதிய கார்கள், புனரமைப்பு பணிகள் உள்ளிட்ட பல்வேறு தேவைகள் குறித்து அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில் மாநிலத்தின் நிதி ஆதாரத்தை வலுப்படுத்தும் விதத்தில், அந்த கோரிக்கைகளை அரசு ஊழியர்கள் மறுபரிசீலனை செய்யுமாறு முதலமைச்சர் குமாரசாமி வெளியிட்ட சுற்றறிக்கையில் வலியுறுத்தி இருக்கிறார்.
அரசு நடத்தும் கூட்டத்தில் பங்கேற்கும் அதிகாரிகள், விவாதங்கள் இடையூறு இன்றி நடைபெற செல்போன் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தி இருக்கிறார்.
இதனிடையே காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தளம் இடையே இலாகா பங்கீடு முடிந்ததால், வரும் 6 ஆம் தேதி அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படும் என்றும் குமாரசாமி தெரிவித்துள்ளார்.