3 நாள் அரசு முறை பயணமாக கோத்தபய ராஜபக்சே இந்தியா வருகை..!
இலங்கை அதிபர் தேர்தல் கடந்த வாரம் 16-ம் தேதி நடைபெற்றது.இந்த தேர்தலில் ஆளும் ஐக்கிய தேசிய கட்சி வேட்பாளர் சஜித் பிரேமதாசா மற்றும் முன்னாள் அதிபர் ராஜபக்சேவின் தம்பியுமான கோத்தபய ராஜபக்சே ஆகியோருக்கும் இடையே தான் போட்டி நிலவியது .
வாக்கு எண்ணிக்கையில் தமிழர்கள் வாழும் வடக்கு , கிழக்கு மாகாணங்களில் சஜித் பிரேமதாசா அதிக வாக்குகள் பெற்றார். ஆனால் சிங்களர்கள் அதிகமாக வசிக்கும் மாகாணங்களில் கோத்தபய ராஜபக்சே அதிக ஓட்டுகள் பெற்றார். இதனால் தொடர்ந்து முன்னிலை பெற்று வந்தார்.
வாக்கு எண்ணிக்கை முடிவில் கோத்தபய ராஜபக்சே பதிமூன்று லட்சத்துக்கும் மேற்பட்ட ஓட்டுகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றார்.இந்த தேர்தலில் கோத்தபய 69 லட்சத்து 24 ஆயிரத்து 255 ஓட்டுகளும் , சஜித் பிரேமதாசா 55 லட்சத்து 64 ஆயிரத்து 239 ஓட்டுகள் பெற்றார்.
கோத்தபய ராஜபக்சே அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றதற்கு பிரதமர் மோடி டுவிட்டர் மற்றும் தொலைபேசி மூலமாகவும் வாழ்த்து தெரிவித்தார்.இதை தொடர்ந்து இந்தியா , இலங்கை இடையிலான கலாச்சார, வரலாற்று நாகரிக உறவுகள் மேலும் வலுப்பெறுவதற்கு கோத்தபய ராஜபக்சே இந்தியாவிற்கு வருமாறு பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார். இந்த அழைப்பை கோத்தபய ராஜபக்சே ஏற்றுக்கொண்டார்.
இந்நிலையில் பிரதமர் மோடி விடுத்த அழைப்பை ஏற்று கோத்தபய ராஜபக்சே இன்று முதல் 3 நாள் அரசு முறை பயணமாக இந்தியா வருகிறார். இந்தியா வரும் கோத்தபய ராஜபக்சே குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் மோடியை சந்திக்கவுள்ளார்.