தங்கக் கடத்தல் வழக்கு.. கே.டி.ஜலீலிடம் என்.ஐ.ஏ விசாரணை.. பாஜகவினர் போராட்டம்.!
திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு எமிரேட் தூதரகத்திற்கு வந்த பார்சலில் 30 கிலோ தங்கக் கடத்தல் வழக்கு தொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) விசாரணை நடத்தி முக்கிய குற்றவாளிகளான ஸ்வப்னா சுரேஷ் , சந்தீப் சிங் உள்ளிட்டோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த தங்க கடத்தல் வழக்கில் கேரள உயர்கல்வி அமைச்சர் கே.டி.ஜலீல் முக்கிய குற்றவாளியான ஸ்வப்னா சுரேஷ் உடன் பலமுறை தொலைபேசியில் தொடர்பு கொண்டதாக கூறப்பட்ட நிலையில், கல்வித்துறை அமைச்சர் கே.டி.ஜலீலிடம் கடந்த வாரம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தினர்.
இதனால், ஜலீலை ராஜினாமா செய்யக் கோரி எதிர்க்கட்சிகள் மாநிலம் முழுவதும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், ஊடக நிருபர்களைத் தவிர்ப்பதற்காக ஜலீல் இன்று கொச்சியில் உள்ள என்ஐஏ அலுவகத்தில் விசாரணைக்காக காலை 6 மணியளவில் ஒரு தனியார் வாகனத்தில் என்ஐஏ அலுவலகத்திற்கு வந்தார். அவரிடம் 2 மணி நேரம் விசாரணை நடைபெற்றதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, ஜலீல் பதவி விலக கோரி எதிர்க்கட்சிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வரும் நிலையில் இன்றும் என்ஐஏ அலுவலகத்திற்கு முன் ஜலீல் பதவி விலகக் கோரி போராட்டம் நடத்திய பாஜகவினர் மீது போலீசார் தண்ணீர் பீச்சி அடித்து விரட்டி அடித்தனர்.
தங்க கடத்தல் வழக்கு தொடர்பான என்ஐஏ விசாரணையின் போது, ஸ்வப்னா சுரேஷ் பல முறை அமைச்சரை தொலைபேசியில் தொடர்பு கொண்டதாக கூறப்படுகிறது. ஆனால், ஸ்வப்னாவுடன் தொடர்பு இல்லை என்று அமைச்சர் மறுத்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.