கோதாவரி ஆற்றில் சுற்றுலா படகு கவிழ்ந்து விபத்து! 12 பேர் உயிரிழப்பு! 30 பேரை காணவில்லை!
நேற்று விடுமுறை தினம் என்பதால் சுற்றுலா பயணிகள் கோதாவரி ஆற்றங்கரைக்கு அதிகமாக வந்திருந்தனர். ஆந்திர மாநிலம், தேவிபட்டினத்தில் உள்ள கோதாவரி ஆற்றங்கரையில் உள்ள பொச்சம்மா கோயிலிலிருந்து பாபிகொண்டாலு என்ற இடத்திற்கு சுற்றுலா பயணிகள் படகு மூலம் சென்றுள்ளனர். அதில் 63 சுற்றுலாப்பயணிகளும், 9 பேர் அந்த சுற்றுலா கப்பலில் பணியாற்றும் பணியாளர்கள் சேர்த்து மொத்தம் 72 பேர் இருந்துள்ளனர். அளவிற்கு அதிகமான பயணிகளை ஏற்றிச் சென்றதால் பாதி வழியிலேயே படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் உயிர் காக்கும் கவசம் அணிந்து இருந்த 25 பேர் மட்டும் பத்திரமாக நீச்சல் அடித்து கரை சேர்ந்தனர். மீதமுள்ளவர்கள் நீரில் மூழ்கினர். அவர்களை தேடும் பணியில் தேசிய பேரிடர் மீட்பு குழு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. 2 ஹெலிகாப்டர்கள், 6 படகுகள் மூலம் மீட்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
இதுவரை 12 பேரின் உடல்கள் கண்டறியப்பட்டுள்ளன மேலும் மீட்கப்பட்ட 10 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்னும் காணாமல்போன 30 பேரை தேடும் பணியில் மீட்புப்படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.