புத்தகம் இல்லாத பள்ளிக்கூட நாட்கள்..! கேரள அரசின் புதிய முயற்சி.!
கேரளா: பள்ளி மாணவர்கள் அதிக எடை கொண்ட பாடப் புத்தகம் மற்றும் நோட்டு புத்தகங்கள் அடங்கிய புத்தக பைகளை கொண்டு செல்வதாக கேரளாவில் பெற்றோர்களின் கவலையாக உள்ளது என கேரள கல்வி அமைச்சர் வி.சிவன்குட்டி நேற்று (வெள்ளி) தெரிவித்தார்.
இது குறித்து மாநில அரசு ஆலோசித்து வரும் புதிய திட்டம் பற்றியும் அமைச்சர் சிவன்குட்டி நேற்று தெரிவித்தார். அவர் கூறுகையில், கேரளாவில் 1ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களின் புத்தக பைகள் எடை அதிகமாக இருப்பது குறித்து அரசாங்கம் விரைவில் புதிய அறிவிப்பை வெளியிடும் என்று கூறினார்.
மேலும், புத்தக பை தொடர்பாக பெற்றோர்கள் மற்றும் கல்வி ஆலோசகர்களிடமிருந்து பல புகார்கள் மற்றும் ஆலோசனைகள் கேரளா கல்வித்துறைக்கு குவிந்து வருகின்றன. சுமையைக் குறைக்கும் நோக்கத்துடன் மாநிலத்தில் பாடப்புத்தகங்கள் ஏற்கனவே இரண்டு பகுதிகளாக குழந்தைகளுக்கு விநியோகிக்கப்பட்டு வருகின்றன.
1ஆம் வகுப்பு முதல் 9ஆம் வகுப்பு வரையில் மாணவர்களின் பள்ளிப் பைகளின் எடை 1.6 கிலோ முதல் 2.2 கிலோ வரையிலும், 10ஆம் வகுப்பு மாணவர்களின் பள்ளிப் பைகளின் எடை 2.5 கிலோ முதல் 4.5 கிலோ வரையிலும் பராமரிக்க வழிகாட்டுதல்கள் விரைவில் வழங்கப்படும். இது தவிர, மாதத்திற்கு குறைந்தது நான்கு நாட்களுக்கு அரசுப் பள்ளிகளில் புத்தக பை இல்லாத நாட்களாக கடைபிடிக்கப்படும். அன்றைய தினம் மாணவர்கள் புத்தகங்கள் இன்றி பள்ளிக்கு வரலாம் இந்த திட்டம் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என கேரளா கல்வி அமைச்சர் சிவன்குட்டி நேற்று தெரிவித்தார்.