சுனிதா வில்லியம்ஸுக்கு பாரத ரத்னா கொடுங்க! முதல்வர் மம்தா பானர்ஜி வேண்டுகோள்!
விண்வெளி வீரர்கள் நாடு திரும்பியது குறித்து மேற்கு வங்க சட்டமன்றத்தில் கொண்டாட்டம் நடைபெற்ற நிலையில் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து முதல்வர் மம்தா பானர்ஜி பேசியிருக்கிறார்.

மேற்கு வங்கம் : ஸ்டார்லைனர் விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி மையத்திற்கு ஆய்வு பணிகளுக்காக இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் மற்றும் அமெரிக்க விண்வெளி வீரர் புட்ச் வில்மோர் ஆகியோர் கடந்த வருடம் ஜூன் மாதம் 5ஆம் தேதி சென்றிருந்தார்கள். திடீரென அவர்கள் சென்ற விண்கலம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக அங்கே தங்கவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.
9 மாதங்கள் அவர்கள் விண்வெளியில் இருந்த நிலையில், பின்னர் பல்வேறு கட்டமுயற்சிக்கு பிறகு ஃபால்கான் ராக்கெட் மூலம் க்ரூ டிராகன் விண்கலம் மூலம் இன்று அதிகாலை 3.30 மணியளவில் அமெரிக்கா புளோரிடா கடலில் தரையிறங்கினார். வெற்றிகரமாக அவர்கள் தரையிறங்கிய நிலையில் பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகிறார்கள். பிரதமர் மோடி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் என பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்கள்.
எனவே, சுனிதா வில்லியம்ஸிற்கு வாழ்த்துக்கள் குவிந்து வரும் நிலையில். மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி விண்வெளி வீரர்கள் நாடு திரும்பியது குறித்து மேற்கு வங்க சட்டமன்றத்தில் கொண்டாட்டம் நடைபெற்றது. அப்போது வாழ்த்துக்களை தெரிவித்ததோடு சுனிதா வில்லியம்ஸுக்கு பாரத ரத்னா வழங்கப்படவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.
இது குறித்து பேசிய அவர் ” வெற்றிகரமாக மீண்டும் பூமிக்கு திரும்பியுள்ள சுனிதா வில்லியம்ஸிற்கு வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். விண்வெளி வீரர்களை பூமிக்கு அழைத்து வந்த குழுவையும் நான் இந்த நேரத்தில் பாராட்டுகிறேன். விண்வெளியில் இருந்த போது சுனிதா வில்லியம்ஸ் சில கஷ்டங்களை சந்தித்திருக்கிறார். கஷ்டங்களையெல்லாம் தாண்டி நம்மளுடைய இந்தியாவின் மகள் திரும்பி வந்துவிட்டது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.
எனக்கு ஒரே ஒரு வேண்டுகோள் தான் இருக்கிறது. இந்த அளவுக்கு சிறப்பான பங்காற்றிய சுனிதா வில்லியம்ஸிற்கு பாரத ரத்னா விருது வழங்கப்படவேண்டும். கண்டிப்பாக இந்த விருது அவருக்கு வழங்கப்பட்டால் நான் இன்னுமே மகிழ்ச்சியாக இருப்பேன்” எனவும் சட்டமன்றத்தின் சார்பாக, சுனிதா வில்லியம்ஸுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் மம்தா பானர்ஜி பேசினார். பாரத ரத்னா விருது என்பது ஒரு அரசியல் சார்பு இல்லாத விருது என்று சொல்லலாம். பொதுவாக சிறந்த சாதனையாளர்களுக்கு இது இந்திய அரசு சார்பில் வழங்கப்பட்டு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.