இனப்படுகொலையும் ஆக்சிஜன் பற்றாக்குறையால் ஏற்படும் உயிரிழப்பும் சமம் – அலகாபாத் ஐகோர்ட்!
ஆக்சிஜன் பற்றாக்குறையால் கொரோனா நோயாளிகள் உயிரிழப்பதும் இனப்படுகொலையும் கிட்டத்தட்ட சமம் தான் என அலகாபாத் ஐகோர்ட் கண்டனம் தெரிவித்துள்ளது.
நாடு முழுவதிலும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் தீவிரித்து கொண்டே தான் செல்கிறது. தினமும் கொரோனாவால் புதிதாக லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்படும் நிலையில், ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்து வருகின்றனர். இந்நிலையில், கொரோனாவால் இறப்பவர்களை விட தற்பொழுது ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. பணம் படைத்தவர்கள் கூட ஆக்சிஜன் இல்லாத சூழ்நிலையில் தவித்து வருகின்றனர்.
உத்தர பிரதேசத்தின் தலைநகர் லக்னோ மற்றும் மீரட்டிலும் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக நோயாளிகள் தொடர்ந்து உயிரிழந்தது குறித்து ஊடகங்களில் செய்திகள் வெளியாகி வருகிறது. தன் அடிப்படையில் அலகாபாத் ஐகோர்ட் தற்பொழுது தாமாகவே முன்வந்து இது குறித்து விசாரணை நடத்தியுள்ளது. இதில் ஆக்சிஜன் சிலிண்டர்களை கொள்முதல் செய்து மருத்துவமனைகளுக்கு வினியோகிக்க கூடிய பொறுப்பில் இருக்கும் அதிகாரிகள் இனப்படுகொலைக்கு சற்றும் குறையாத குற்றம் இழைத்து உள்ளதாக கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும் அடுத்த 48 மணி நேரத்தில் லக்னோ மற்றும் மீரட் மாவட்ட கலெக்டர்கள் இதுகுறித்து அறிக்கை அளிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.