இந்தியாவில் முதல் மாநிலம்… உத்தரகாண்டில் அமலுக்கு வரும் பொது சிவில் சட்டம்!
உத்தரகாண்ட் மாநிலத்தில் பொதுசிவில் சட்டம் இன்று அமலுக்கு வருகிறது. பாலினம், சாதி, மதம் அடிப்படையில் எந்த பாகுபாடும் இருக்காது என்று அம்மாநில முதல்வர் புஷ்கர்சிங் தாமி அறிவித்துள்ளார்.
உத்தரகாண்ட் : பாஜக ஆளாத மாநிலங்களில் பொது சிவில் சட்டத்திற்கு கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில் நாட்டிலேயே முதல் மாநிலமாக உத்தராகண்டில் இன்று முதல் அமல்படுத்தப்படுகிறது.
கடந்த 2022-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலின்போது, உத்தரகாண்ட் மாநிலத்தில் சிவில் சட்டம் நிறைவேற்றப்படும் என பா.ஜ.க. அதன் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்திருந்தது. அதன்படி, அந்த தேர்தலில் வெற்றி பெற்று இரண்டாவது முறையாக ஆட்சி அமைத்தது.
இதை தொடர்ந்து, பொதுசிவில் சட்டத்திற்கான இணையதளத்தை உத்தராகண்ட் முதலமைச்சர் இன்று பிற்பகல் 12.30 மணிக்கு தொடங்கி வைக்கிறார். இந்த சட்டம் திருமணம், விவாகரத்து, வாரிசு உரிமை, தத்தெடுத்தல் உள்பட அனைத்து விஷயங்களிலும், அனைத்து மதத்தினரும் ஒரே சட்டத்தை பின்பற்றும் வகையில் அமல்படுத்தப்படுகிறது.
இதன்மூலம், சுதந்திர இந்தியாவில் முதலாவதாக யு.சி.சி. எனப்படும் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்திய மாநிலம் என்ற அந்தஸ்தை உத்தராகண்ட் பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.