அக்.21ல் ககன்யான் சோதனை ஓட்டம் – இஸ்ரோ அறிவிப்பு
மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் இந்தியாவின் கனவு திட்டமான ககன்யான் திட்டத்தின் சோதனை ஓட்டம் வரும் 21ம் தேதி நடைபெறும் என இஸ்ரோ அறிவித்துள்ளது. அதன்படி, ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து வரும் 21ம் தேதி காலை 7 மணி முதல் 9 மணிக்குள் ககன்யான் திட்டத்தின் சோதனை ஓட்டம் நடத்தப்பட உள்ளது. ககன்யான் திட்டத்தின் இந்த புதிய அறிவிப்பை இஸ்ரோ தனது எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்துள்ளது.
ஏற்கனவே, நிலவில் சந்திரயான், சூரியனுக்கு ஆதித்யா என பல்வேறு சாதனைகளை இந்தியா புரிந்து வரும் நிலையில், தற்போது மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தின் சோதனை ஓட்டம் நடத்தப்பட உள்ளது. விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டத்தை செயல்படுத்த இஸ்ரோ தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இந்த ககன்யான் திட்டத்தின் கீழ் 3 வீரர்கள் விண்வெளிக்கு அனுப்பப்பட உள்ளனர்.
அவர்களை பூமியில் இருந்து 400 கி.மீ தொலைவில் பூமியின் சுற்றுப்பாதையில் நிறுத்தப்பட்டு, மூன்று நாட்கள் விண்வெளியில் ஆய்வு செய்வர். இந்த ஆய்வை முடித்த பிறகு வங்காள விரிகுடா அல்லது அரபிக்கடலில் தரையிறங்கி பாதுகாப்பாக பூமிக்குக் கொண்டு வருவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த திட்டத்தில் மனித பாதுகாப்பு மிக முக்கியம் என்பதால் அதை உறுதி செய்ய, பொறியியல் அமைப்புகள் மற்றும் மனித மைய அமைப்புகளை உள்ளடக்கிய பல்வேறு புதிய தொழில்நுட்பங்கள் உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்படுகின்றன.
மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் இஸ்ரோவின் ககன்யான் திட்டம் ஆனது எல்விஎம்3 – எச்எல்விஎம்3 (LVM3 – HLVM3) ராக்கெட் மூலம் செயல்படுத்தப்படவுள்ளது. எல்விஎம்3 ராக்கெட் திட நிலை, திரவ நிலை மற்றும் கிரையோஜெனிக் என மூன்று நிலையைக் கொண்டுள்ளது. இதில் எச்எல்விஎம்3 ஆனது சுற்றுப்பாதை தொகுதியை 400 கிமீ தொலைவில் உள்ள குறைந்த பூமி சுற்றுப்பாதையில் செலுத்தும் திறன் கொண்டதாக இருக்கும்.
இந்த திட்டத்திற்காக தேர்வு செய்யப்பட்ட விண்வெளி வீரர்கள் பெங்களூருவில் உள்ள விண்வெளி வீரர் பயிற்சி நிலையத்தில் உடல் தகுதி பயிற்சி, சிமுலேட்டர் பயிற்சி மற்றும் ககன்யான் திட்டம் சார்ந்த பயிற்சி பெற்று வருகின்றனர். ககன்யான் திட்ட என்ஜின் சோதனையும் சமீபத்தில் நடைபெற்றது. மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பி மீண்டும் பூமிக்கு அழைத்து வரும் ககன்யான் திட்டத்தில் இன்ஜின் சோதனையும் வெற்றி பெற்றது.
இந்த திட்டத்தில் பயன்படுத்தப்பட உள்ள இன்ஜின்களின் சோதனை, தமிழகத்தின் மகேந்திரகிரியில் உள்ள ஆய்வு மையத்தில் நடந்து வருகிறது. இந்த நிலையில், ககன்யான் திட்டத்தின் சோதனை ஓட்டம் வரும் 21ம் தேதி ஸ்ரீஹரிகோட்டாவில் நடைபெறும் என இஸ்ரோ அறிவித்துள்ளது.
Mission Gaganyaan:
The TV-D1 test flight is scheduled for
????️October 21, 2023
????between 7 am and 9 am
????from SDSC-SHAR, Sriharikota #Gaganyaan pic.twitter.com/7NbMC4YdYD— ISRO (@isro) October 16, 2023