G20Summit: நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டிய தருணம் இது.! ஜி20-ல் பிரதமர் மோடி பேச்சு..

PMModiG20

உலகமே தற்போது உற்று நோக்கும் வகையில் இந்தியா தலைமை தாங்கி நடத்தும் 18வது ஜி20 உச்சி மாநாடு தலைநகர் டெல்லியில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்றும் நாளையும் நடக்கவுள்ள இந்த மாநாட்டில் இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து உட்பட ஜி20 கூட்டமைப்பில் உள்ள நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.

இதில் பொருளாதார மேம்பாடு, காலநிலை மாற்றம் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்நாளில் ஒரேபூமி என்ற தலைப்பிலும், ஒரே குடும்பம் என்ற தலைப்பில் ஆலோசனை நடைபெறவுள்ளது. அதன்படி மாநாடு தொடங்கிய நிலையில் பிரதமர் மோடி உரையாற்றி வருகிறார்.

அவர் கூறியதாவது, “ஜி20 நிகழ்ச்சிகளைத் தொடங்குவதற்கு முன், மொராக்கோவில் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கு எனது இரங்கலைத் தெரிவிக்க விரும்புகிறேன். காயமடைந்த அனைவரும் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறோம். இந்த கடினமான நேரத்தில் மொராக்கோவிற்கு அனைத்து உதவிகளையும் செய்ய இந்தியா தயாராக உள்ளது.” என்று கூறினார்.

தொடர்ந்து, “இன்று ஜி 20 தலைவர் என்ற முறையில், உலகளாவிய நம்பிக்கை பற்றாக்குறையை நம்பகத்தன்மை கொண்ட ஒன்றாக மாற்றுமாறு இந்தியா உலக நாடுகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது. நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டிய தருணம் இது. இந்த நேரத்தில், ‘அனைவரின் ஆதரவு, அனைவரின் வளர்ச்சி, அனைவரின் நம்பிக்கை, அனைவரின் முயற்சி’ என்ற மந்திரம் நமக்கு ஜோதியாக இருக்கும்.”

“வடக்குக்கும் தெற்குக்கும் இடையிலான பிளவு, கிழக்கிற்கும் மேற்குக்கும் இடையிலான தூரம், உணவு மற்றும் எரிபொருள் மேலாண்மை, பயங்கரவாதம், இணையப் பாதுகாப்பு, சுகாதாரம், எரிசக்தி அல்லது நீர் பாதுகாப்பு என எதுவாக இருந்தாலும், எதிர்கால சந்ததியினருக்கு நாம் இதற்கு உறுதியான தீர்வைக் காண வேண்டும்.”

“21 ஆம் நூற்றாண்டு உலகிற்கு ஒரு புதிய திசையை காட்ட ஒரு முக்கியமான நேரம். பழைய பிரச்சனைகள் நம்மிடம் இருந்து புதிய தீர்வைத் தேடிக்கொண்டிருக்கும் காலகட்டம் இது, அதனால்தான் மனிதனை மையமாகக் கொண்டு நமது பொறுப்புகளை நிறைவேற்றி முன்னேற வேண்டும். கோவிட்-19ஐ நாம் தோற்கடிக்க முடிந்தால், போரினால் ஏற்பட்ட நம்பிக்கைப் பற்றாக்குறையிலும் வெற்றிபெற முடியும்”

“இந்தியாவின் ஜி20 தலைவர் பதவியானது, நாட்டிற்கு உள்ளேயும் வெளியேயும் அனைவரின் ஆதரவின் அடையாளமாக மாறியுள்ளது.இது இந்தியாவில் மக்களின் ஜி20 ஆக மாறியுள்ளது. கோடிக்கணக்கான இந்தியர்கள் இதில் இணைந்துள்ளனர். நாட்டின் 60க்கும் மேற்பட்ட நகரங்களில், 200க்கும் மேற்பட்ட கூட்டங்கள் நடந்துள்ளன. அனைவரின் ஆதரவு என்ற உணர்வுடன், ஆப்பிரிக்க யூனியனுக்கு ஜி20-ல் நிரந்தர உறுப்புரிமை வழங்க இந்தியா முன்வந்துள்ளது. அனைத்து உறுப்பினர்களும் இந்த முன்மொழிவை ஏற்றுக்கொள்வார்கள் என்று நான் நம்புகிறேன்.” என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்