#G20: டெல்லியில் அனைத்துக்கட்சி ஆலோசனை கூட்டம் தொடங்கியது!
பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் முதலமைச்சர் முக ஸ்டாலின் உள்ளிட்ட அனைத்துக்கட்சி தலைவர்கள் பங்கேற்பு.
ஜி-20 உச்சிமாநாடு தொடர்பாக டெல்லியில் அனைத்துக்கட்சி தலைவர்கள் பங்கேற்கும் ஆலோசனை கூட்டம் தொடங்கியது. பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் முதலமைச்சர் முக ஸ்டாலின் உள்ளிட்ட அனைத்துக்கட்சி தலைவர்களும் பங்கேற்றுள்ளனர்.
குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெற்று வரும் கூட்டத்தில், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோரும் பங்கேற்றுள்ளனர். நாடு முழுவதும் நடைபெற உள்ள ஜி-20 துணை மாநாட்டின் சாராம்சங்கள் குறித்து அனைத்துக்கட்சி தலைவர்கள் ஆலோசனை கூட்டத்தில் விவாதிக்கப்படுகிறது.
18-ஆவது ஜி-20 மாநாடு 2023-ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற உள்ளது. இதற்கான பொறுப்பு டிசம்பர் 1-ஆம் தேதி இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டது. ஜி-20 மாநாடு நடத்துவதற்கு முன்பு துணை மாநாடு நாடு முழுவதும் 200 நகரங்களில் நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் சென்னை, திருச்சி, தஞ்சை, நாகர்கோவில் உள்ளிட்ட 4 இடங்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் அனைத்துக்கட்சி தலைவர்கள் ஆலோசனை கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் ஜெய்சங்கர், பிரகாலத் ஜோஷி உள்ளிட்டோர் கலந்துகொண்டுள்ளனர்.