தப்பியோடிய அம்ரித்பால் சிங்; தீவிர தேடுதல் வேட்டையில் காவல்துறை.!
அம்ரித்பால் சிங்கைக் கைது செய்வதற்கான தீவிர தேடுதல் வேட்டை நடந்து வருவதாக பஞ்சாப் காவல்துறை தெரிவித்துள்ளது.
தீவிர சீக்கிய மத போதகரும் காலிஸ்தான் ஆதரவாளருமான அம்ரித்பால் சிங், தப்பியோடியவர், நாங்கள் அவரைத் தேடி வருகிறோம், விரைவில் அவர் கைது செய்யப்படுவார் என்று ஜலந்தர் காவல்துறை ஆணையர் குல்தீப் சிங் சாஹல் தெரிவித்துள்ளார். மேலும் அம்ரித்பால் சிங்கின் குழுவைச்சேர்ந்த 7பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று சாஹல் கூறினார்.
78பேர் கைது: பஞ்சாப் அரசு, அம்ரித்பாலுக்கு எதிராக நடத்திய ஒரு பெரிய அடக்குமுறையையில் அவர் தலைமையிலான ஒரு அமைப்பைச் சேர்ந்த 78 உறுப்பினர்களை போலீசார் கைது செய்தனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இணையம் முடக்கம்: தற்போது இந்த தேடுதல் நடவடிக்கை நடந்து வருவதால், அதிகாரிகள் பல இடங்களில் பாதுகாப்பை மேலும் பலப்படுத்த, மாநிலத்தில் இணையம் மற்றும் எஸ்எம்எஸ் சேவைகளை இன்று (ஞாயிற்றுக்கிழமை) மதியம் வரை நிறுத்தி வைத்துள்ளனர்.
சிங் தலைமையிலான ‘வாரிஸ் பஞ்சாப் டி’ குழுவின் உறுப்பினர்களுக்கு எதிராக, பல குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், மாநிலம் தழுவிய சுற்றிவளைப்பு மற்றும் தேடுதல் நடவடிக்கைகளை (CASO) போலீசார் நேற்று தொடங்கியுள்ளனர்.
போலீசாருடன் மோதல்: முன்னதாக அம்ரித்பால் மற்றும் அவரது ஆதரவாளர்கள், சிலர் வாள்கள் மற்றும் துப்பாக்கிகளை காட்டி, அமிர்தசரஸ் நகரின் புறநகரில் உள்ள அஜ்னாலா காவல் நிலையத்திற்குள் நுழைந்து, அம்ரித்பாலின் உதவியாளர் ஒருவரை விடுவிப்பதற்காக போலீசாருடன் மோதலில் ஈடுபட்டனர்.
தேடுதல் வேட்டை: இந்த சம்பவத்தில் ஆறு காவலர்கள் காயமடைந்த சம்பவத்திற்குப் பிறகு மாநிலத்தில் ஆம் ஆத்மி அரசாங்கம், தீவிரவாதிகளுக்குக் கட்டுப்பட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டது. தப்பியோடிய காலிஸ்தானி ஆதரவு தலைவர் அம்ரித்பால் சிங் இன்னும் தலைமறைவாக உள்ளதாகவும், அவரைப் பிடிக்க தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருவதாகவும், விரைவில் அவர் கைது செய்யப்படுவார் என காவல்துறை தெரிவித்துள்ளது.