அன்று முதல் இன்று வரை மோடி சொல்லி கொடுத்தபடியே என் மனைவி கிச்சடி செய்கிறார் – பாஜக பிரமுகர் நெகிழ்ச்சி
என் மனைவிக்கு ஜவ்வரிசி கிச்சடி செய்ய சொல்லிக் கொடுத்தவர் பிரதமர் மோடி என பாஜக நிர்வாகி நெகிழ்ச்சி.
கடந்த மே.31-ஆம் தேதி பிரதமர் மோடி இமாச்சலப் பிரதேச தலைநகர் சிம்லாவுக்கு சென்றிருந்தார். தன் அரசியல் வாழ்வின் தொடக்கக் கட்டத்தில் இமாச்சலப் பிரதேச பாஜக பொறுப்பாளராக தற்போதைய பிரதமர் மோடி 1997-ஆம் ஆண்டு பதவி வகித்திருந்தார். அப்போது அந்த மாநில பாஜக தலைவராக இருந்தவர் தீபக் சர்மா. இவர் ஆண்டுதோறும் சிம்லாவில் உள்ள ஜகு கோயிலுக்கு செல்வது வழக்கம் என்றும் இவருடன் பிரதமர் மோடியும் சுமார் 10 முறை ஜகு கோயிலுக்கு சென்றுள்ளாராம்.
இந்த நிலையில், சமீபத்தில் சிம்லாவுக்கு சென்ற பிரதமர் மோடி, தீபக் சர்மா குறித்து தன்னிடம் கேட்டறிந்ததாக பேரணி ஒன்றில் உரையாற்றிய போது பேசிய இமாச்சலப் பிரதேச முதலமைச்சர் ஜெய் ராம் தாக்கூர் தெரிவித்தார். இதுகுறித்து தீபக் சர்மா கூறுகையில், மோடி தன்னைப் பற்றி கேட்டறிந்தது குறித்து மகிழ்ச்சி. தற்போதைய பிரதமர் மோடி இமாச்சலப் பிரதேசத்தின் பாஜக பொறுப்பாளராக இருந்தபோது, சிம்லா பஜாரில் உள்ள என் தீபக் வைஷ்ணவ் போஜ்னல்யா உணவகத்துக்கும், என் வீட்டுக்கும் அடிக்கடி வருவார் என கூறியுள்ளார்.
மேலும், பிரதமர் மோடி, என் மனைவிக்கு ஜவ்வரிசி கிச்சடி செய்ய கற்றுக் கொடுத்த சுவாரஸ்யமான நிகழ்வை பாஜக கவுன்சிலர் தீபக் சர்மா பகிர்ந்துள்ளார். அதாவது அவர் கூறுகையில், 1997 ஆம் ஆண்டு இரண்டாவது நவராத்திரியின் போது ‘சபு தனா கிச்சிடி’ சாப்பிட மோடி விருப்பம் தெரிவித்தார். என் மனைவி சீமா ஷர்மா அவருக்கு ஜவ்வரிசி கிச்சடி சமைத்துக் கொடுத்தார். ஆனால் அது அவர் எதிர்ப்பார்த்த அளவுக்கு நன்றாக இல்லை. அதன் பிறகு கிச்சடி எப்படி செய்ய வேண்டும் என்ற பக்குவத்தை என் மனைவி சீமாவுக்கு பிரதமர் மோடி கற்றுக் கொடுத்தார். அன்று முதல் இன்று வரை அவர் சொல்லிக் கொடுத்தது போன்றே கிச்சடியை சமைத்து வருகிறார் சீமா என பழைய நினைவுகளை தீபக் சர்மா மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.