கர்நாடகாவில் ஜூன் 11 முதல் பெண்களுக்கு இலவச பயணம்! 5 திட்டங்களுக்கு அமைச்சரவையில் ஒப்புதல்!
குடும்ப தலைவிகளுக்கு ரூ.2,000, வேலையில்லாத பட்டதாரிகளுக்கு ரூ.3,000 உள்ளிட்ட 5 திட்டங்களுக்கு அமைச்சரவையில் ஒப்புதல்.
கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா தலைமையில் இன்று முதல் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. விதான்சௌதா மண்டபத்தில் 2023ஆம் ஆண்டுக்கான முதல் மாநில அமைச்சரவைக் கூட்டத்தில் துணை முதலமைச்சர் டி.கே. சிவக்குமார் உட்பட அமைச்சர்கள் பலரும் பங்கேற்றனர். இந்த அமைச்சரவை கூட்டத்தில் காங்கிரஸ் அளித்த 5 வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவது குறித்து ஆலோசனை நடத்தியதாக கூறப்பட்டது.
இந்த நிலையில், கர்நாடகாவில் ஜூன் 11-ஆம் தேதி முதல் பெண்கள் அரசு பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்யலாம் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. கர்நாடகா முதலமைச்சர் சித்தராமையா தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதுபோன்று, ஜூலை 1-ஆம் தேதி முதல் மாதந்தோரும் வீடுகளுக்கு 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும்.
இதுபோன்று குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோரும் ரூ.2,000, வேலையில்லாத பட்டதாரிகளுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.3,000 மற்றும் வேலையில்லாத பட்டயப் படிப்பு படித்தவர்களுக்கு ரூ.1,500, வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ள குடும்பங்களுக்கு ஒவ்வொரு மாதமும் ஒரு நபருக்கு 10 கிலோ அரிசி ஆகிய 5 முக்கிய திட்டங்களுக்கும் அமைச்சரவையில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. தேர்தல் வாக்குறுதிகள் இந்த நிதியாண்டில் நிறைவேற்றப்படும் என்றும் முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.