உஜ்வாலா திட்டத்தின் கீழ் 20 லட்சம் குடும்பங்களுக்கு இலவச சமையல் எரிவாயு – உத்தர பிரதேச முதல்வர் அறிவிப்பு!
உஜ்வாலா திட்டத்தின் கீழ் வறுமை கோட்டிற்கு கீழுள்ள 20 லட்சம் குடும்பங்களுக்கு இலவச சமையல் எரிவாயு விநியோகம் செய்யப்படும் என உத்தர பிரதேச முதல்வர் அறிவிப்பு.
மே ஒன்றாம் தேதி 2016-ஆம் ஆண்டு பிரதமர் மோடி அவர்களால் பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா எனும் முதன்மைத் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. இந்த திட்டத்தின்படி வறுமை கோட்டிற்கு கீழே உள்ள குடும்பங்களைச் சேர்ந்த பெண்களுக்கு இலவச சமையல் எரிவாயு வழங்கப்படும். பாரம்பரிய சமையல் எரிபொருளான விறகு, நிலக்கரி மற்றும் மாட்டு சாணம் போன்றவற்றை பயன்படுத்தும் கிராமப்புற மக்கள் மற்றும் பின்தங்கிய மக்களுக்கு எல்பிஜி போன்ற சுத்தமான சமையல் எரிபொருளை கிடைக்கச் செய்யும் நோக்கில் இந்தத் திட்டம் தொடங்கப்பட்டது.
ஏற்கனவே, கடந்த மே 1ஆம் தேதி 2016 ஆம் ஆண்டு முதல் கட்டமாக சமையல் எரிவாயு வழங்கப்பட்ட நிலையில், தற்போது இரண்டாம் கட்டமாக ஆகஸ்ட் 10 ஆம் தேதி உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அவர்கள் இலவச சமையல் எரிவாயு வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார். இந்தத் திட்டத்தின் கீழ் 20 லட்சம் பெண்களுக்கு இலவச சமையல் எரிவாயு வழங்கப்படும் எனவும் அவர் யோகி ஆதித்யநாத் அவர்கள் தெரிவித்துள்ளார்.