ஒரு மாதத்திற்கு இலவச பிராட்பேண்ட் சேவை வழங்கப்படும் – பிஎஸ்என்எல் அதிரடி அறிவிப்பு.!
சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா என்ற கொவிட் 19 வைரஸ் அந்நாட்டை விட்டு சற்று விளங்கியுள்ளது. இந்த வைரஸ் தற்போது இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது. இதன் விளைவு காரணமாக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரிவர்களை வீட்டில் இருந்து வேலை பார்க்குமாறு மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.
இந்த நிலையில் வீட்டில் இருந்து பணிபுரிவதை ஊக்குவிப்பதற்காக ஒரு மாதத்துக்கு இலவச பிராண்ட்பேண்ட் இணையச் சேவை வழங்கப்படும் என்று பிஎஸ்என்எல் நிறுவனம் அறிவித்துள்ளது. இதுகுறித்து அந்நிறுவனத்தின் இயக்குநா் விவேக் பன்சால் கூறுகையில், அனைத்து குடிமக்களுக்கும் ஒரு மாத காலத்துக்கு பிராண்ட்பேண்ட் இணையச் சேவையை இலவசமாக அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்றும் இந்தச் சேவையை வீட்டிலிருந்து பணிபுரிவதற்கு பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.
மேலும் புதிதாக பிராட்பேண்ட் இணைப்பைப் பெற விரும்புபவா்கள், தொலைபேசி மூலமாக விண்ணப்பிக்கலாம் என்றும் பிராட்பேண்ட் இணையச் சேவையை பெறுவதற்காக வாடிக்கையாளா்கள் பிஎஸ்என்எல் சேவை மையத்துக்கு நேரில் வர வேண்டிய அவசியம் இல்லை என்று விவேக் பன்சால் தெரிவித்தாா். இதையடுத்து புதிய பிராண்ட்பேண்ட் சேவையைப் பெறுபவா்கள் இணைப்பை அளிப்பதற்கு கட்டணம் செலுத்தத் தேவையில்லை. ஆனால், மோடம் பெறுவதற்கு மட்டும் கட்டணம் செலுத்த வேண்டும் என்று குறிப்பிட்டார்.