‘இலவச பிரியாணி மற்றும் தங்கும் விடுதி’ – கேரளாவில் 10-ம் வகுப்பு தேர்வில் தேர்ச்சியடையாத மாணவர்களுக்கு அதிரடி சலுகை…!
கேரளாவில் 10-ம் வகுப்பு தேர்வில் தேர்ச்சியடையாத மாணவர்களுக்கு இலவச பிரியாணி மற்றும் தங்கும் விடுதி போன்ற அதிரடி சலுகை வழங்கப்படுகிறது.
இந்தியா முழுவதும் கொரோனா வைரசின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வந்த நிலையில் பல மாநிலங்களில் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது. அதன்படி தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்கள் பொது தேர்வுகளை ரத்து செய்த நிலையில், கேரளாவில் கொரோனா தொற்றுக்கு மத்தியிலும் பத்தாம் வகுப்பு தேர்வை கேரள அரசு நடத்தியது.
இந்த தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் இந்த ஆண்டு 4.19 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதியுள்ளனர். அதில் 99.47 சதவீதம் பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். 2,236 மாணவர்கள் தேர்வில் தேர்ச்சி அடையவில்லை. கொரோனா பாதிப்பு காரணமாக பள்ளிகள் முறையாக செயல்படவில்லை. இந்த நிலையில், தேர்வில் தோல்வியடைந்த மாணவர்கள், சமூக பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்கள் என்றும், கற்கும் திறன் குறைந்தவர்கள் என்றும் தெரியவந்துள்ளது.
இந்நிலையில், கேரளாவின் கோழிக்கோடு பகுதியை சேர்ந்த சதீஷ் என்பவர் தமிழ்நாட்டில் உள்ள கொடைக்கானல் உள்ளிட்ட பகுதிகளில் தங்கும் விடுதிகளை நடத்தி வருகிறார். இதனையடுத்து, தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களின் மன உளைச்சலைப் போக்கி அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக அவர்களுக்கு விடுதிகளில் இலவசமாக தங்குவதற்கு சலுகையை வழங்கி உள்ளார். மேலும் கேரளாவில் கொச்சி பகுதியில் பிரியாணி கடை நடத்துபவர் பத்தாம் வகுப்பு தோல்வி அடைந்தவர்களுக்கு குழிமந்தி பிரியாணி இலவசமாக வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.