15 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்த காங்கிரஸ் எம்எல்ஏ! முக்கிய நபர்கள் அதிரடி கைது!
கேரளா காங்கிரஸ் எம்எல்ஏ உமா தாமஸ் 15 அடி உயர மேடையில் இருந்து தவறி விழுந்த சம்பவத்தில் இதுவரை 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொச்சி : கேரளா மாநிலம் கொச்சியில் பாலாரிவட்டம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கலூர் மைதானத்தில் நடிகை திவ்யா உன்னி தலைமையில் ஒரு பரதநாட்டிய நிகழ்ச்சி சில தினங்களுக்கு முன்னர் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. கின்னஸ் சாதனைக்காக சுமார் 1000க்கும் மேற்பட்டோர் இந்த நடன நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியை காண கேரள அமைச்சர் சஜி செரியன், திருக்காட்கரை காங்கிரஸ் எம்எல்ஏ உமா தாமஸ் ஆகிய முக்கிய அரசியல் தலைவர்கள் கலந்து கொண்டனர். இவர்களுக்கான மேடையானது சுமார் 15 அடி உயரத்தில் அமைக்கப்பட்டிருந்தது இந்த மேடையில் தனது இருக்கையில் அமர சென்று எம்எல்ஏ உமா தாமஸ் தவறி 15 அடியில் இருந்து கிழே விழுந்தார்.
இந்த விபத்தில் எம்எல்ஏ உமா தாமஸின் தலை, முதுகு பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். முதலில் தீவிர சிகிச்சை பிரிவில் உயிருக்கு ஆபத்தான முறையில் சிகிச்சை பெற்று வந்த உமா தாமஸ் , தற்போது உடல்நிலை முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் குழு தெரிவித்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக ஆய்வு செய்த விசாரணை குழுவினர், விழா மேடை பாதுகாப்பின்றி அமைக்கப்பட்டுள்ளது, அவசர தேவைக்கு ஆம்புலன்ஸ் அருகில் இல்லை. முறையான மருத்துவ முன்னெச்சரிக்கை இல்லை என விழா ஏற்பாட்டாளர்கள் மீது பல்வேறு குற்றசாட்டுகளை முன்வைத்தனர்.
இதனை தொடர்ந்து நேற்று விழா ஏற்பாட்டாளர் மிருதங்க விஷன் நிறுவனத்தின் உரிமையாளர் எம்.நிகோஷ் குமாரை கொச்சி பாலாரிவட்டம் காவல் நிலைய போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்று சுமார் 7 மணிநேரம் விசாரணை செய்து பிறகு கைது செய்தனர்.
மேலும், மேடையை கட்டமைத்த பென்னி, மிருதங்க விஷன் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஷெமீர் அப்துல் ரஹீம், கிருஷ்ணகுமார் ஆகியோரையும் போலீஸார் கைது செய்தனர். இவர்கள் மீது, தனிநபர் பாதுகாப்புக்கு ஆபத்தை விளைவிப்பது, அலட்சியம், உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் ஜாமீனில் வெளியே வரமுடியாதபடி வழக்கு பதியப்பட்டுள்ளது என்றும் அவர்களின் வங்கி கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளது என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.