உலகின் மிகவும் சக்திவாய்ந்த பெண்கள்… ஃபோர்ப்ஸ் வெளியிட்டுள்ள பட்டியலில் நான்கு இந்தியர்கள்!
வணிக இதழான (Business magazine Forbes) ஃபோர்ப்ஸ், 2023ம் ஆண்டிற்கான உலகின் மிகவும் சக்திவாய்ந்த பெண்களின் வருடாந்திர பட்டியலை வெளியிட்டுள்ளது. இதுதொடர்பான பட்டியல் ஆண்டுதோறும் வெளியிட்டு வரும் நிலையில், இந்தாண்டுக்கான பட்டியலும் வெளியாகியுள்ளது. அதில், 4 இந்தியர்கள் இடம்பெற்றுள்ளனர். இந்த 4 பெண்களும் செல்வாக்குமிக்க குரல்களை வெளிப்படுத்தி, உலக அரங்கில் தங்கள் பெயர்களை பொறித்துள்ளனர்.
ஃபோர்ப்ஸ் 2023ம் ஆண்டிற்கான உலகின் மிகவும் சக்திவாய்ந்த பெண்களின் பட்டியல் மற்றும் தரவரிசையை தீர்மானிக்க பணம், ஊடகம், தாக்கம் மற்றும் செல்வாக்கு ஆகியவையை கொண்டு தயார் செய்யப்பட்டுள்ளது. உலகமே தங்களின் சாதனைகளை கொண்டாடும் வேளையில், இந்த நான்கு இந்தியப் பெண்களும் உலக அரங்கில் தலைமைத்துவம் மற்றும் சிறந்து விளங்குவதற்கான சக்திவாய்ந்த அடையாளங்களாக இருக்கிறார்கள்.
டெய்லர் ஸ்விஃப்ட் மற்றும் அமெரிக்க துணைத் தலைவர் கமலா ஹாரிஸ் போன்ற ஆளுமைகளை உள்ளடக்கிய உலகின் சக்திவாய்ந்த பெண்களின் ஃபோர்ப்ஸ் பட்டியலில் இந்தியாவின் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் மூன்று இந்திய தொழிலதிபர்களின் பெயர்களும் இடம்பிடித்துள்ளன.
நிர்மலா சீதாராமன் :
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் (வயது 64), பாரதிய ஜனதா கட்சியின் (BJP) மூத்த நிர்வாகியாவார். கடந்த 2019ம் ஆண்டு முதல் மத்திய நிதி அமைச்சராகவும், கார்ப்பரேட் விவகார அமைச்சராகவும் இருந்து வருகிறார். சீதாராமன் 2017 முதல் 2019 வரை 28 வது பாதுகாப்பு அமைச்சராக பணியாற்றினார்.
இந்திரா காந்திக்குப் பிறகு இந்தியாவின் இரண்டாவது பெண் பாதுகாப்பு அமைச்சராகவும் நிதி அமைச்சராகவும் ஆனார். ஃபோர்ப்ஸ், 2022ம் ஆண்டிற்கான உலகின் மிகவும் சக்திவாய்ந்த பெண்களின் வருடாந்திர பட்டியலில் 36வது இடம் பிடித்த சீதாராமன், 2023ம் ஆண்டில் சற்று முன்னேறி 32வது இடத்தை பிடித்துள்ளார்.
ரோஷ்னி நாடார் மல்ஹோத்ரா :
ரோஷ்னி நாடார் மல்ஹோத்ரா (வயது 42), ஒரு இந்திய பணக்காரர் மற்றும் நன்கொடையாளர் ஆவார். இந்திய பெண் தொழிலதிபர் ஷிவ் நாடாரின் மகள் ரோஷ்னி நாடார் ஆவார். ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் தலைவரான இவர், இந்தியாவில் பட்டியலிடப்பட்ட ஐடி நிறுவனத்தை வழிநடத்தும் முதல் பெண்மணி ஆவார்.
அவர் ஜூலை 2020-ல் HCL இன் தலைவராக பொறுப்பேற்றார். ஐஐஎஃப்எல் வெல்த் ஹுருன் இந்தியா பணக்காரர்கள் பட்டியலின் (2019) படி, ஷிவ் நாடார், இந்தியாவின் பணக்காரப் பெண்ணாக அங்கீகரிக்கப்பட்டுள்ளார். எனவே, மல்ஹோத்ரா தொடர்ந்து ஃபோர்ப்ஸின் உலகின் சக்திவாய்ந்த பெண்களில் ஒருவராக உள்ளார், 2019ல் 54வது இடத்தையும், 2020ல் 55வது இடத்தையும், தற்போது 2023ல் 60வது இடத்தையும் பிடித்துள்ளார்.
சோமா மொண்டல் :
60 வயதான சோமா மொண்டல், இந்திய ஸ்டீல் ஆணையத்தின் தற்போதைய தலைவராக உள்ளார். ஜனவரி 2021 முதல் இந்த பொறுப்பில் இருக்கும் முதல் பெண் என்ற வரலாற்றை உருவாக்குகிறார். புவனேஸ்வரில் பிறந்த இவர், 1984ல் எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங்கில் பட்டம் பெற்றவர்.
உலோகத் துறையில் 35 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் பெற்ற இவர், NALCO-வில் துவங்கி, 2017ல் SAIL-இல் சேருவதற்கு முன் இயக்குனராக உயர்ந்தார். SAIL-இன் முதல் பெண் செயல்பாட்டு இயக்குனர் மற்றும் தலைவர். 2023 இல் ETPrime மகளிர் தலைமைத்துவ விருதுகளில் ‘ஆண்டின் தலைமை நிர்வாக அதிகாரி’ என கௌரவிக்கப்பட்டார். தற்போது உலககின் சக்திவாய்ந்த பெண்கள் பட்டியலில் 70வது இடத்தை பிடித்துள்ளார்.
கிரண் மஜும்தார்-ஷா :
கிரண் மஜும்தார்-ஷா 9வயது 70) ஒரு முக்கிய இந்திய பில்லியனர் தொழிலதிபர் ஆவார். இவர், இந்தியாவில் பெங்களூரில் பயோகான் லிமிடெட் மற்றும் பயோகான் பயோலாஜிக்ஸ் லிமிடெட் ஆகியவற்றை நிறுவி வழிநடத்தி வருகிறார். பயோடெக்னாலஜி நிறுவனங்களில் அவரது பங்கைத் தவிர, பெங்களூரில் உள்ள இந்திய மேலாண்மை நிறுவனத்தின் முன்னாள் தலைவராகவும் இருந்தார்.
மஜும்தார் ஷா, அறிவியல் மற்றும் வேதியியலில் அவரது பங்களிப்புகளுக்காக 2014ம் ஆண்டில் ஓத்மர் தங்கப் பதக்கம் உட்பட பல பாராட்டுகளைப் பெற்றுள்ளார். அதுமட்டுமில்லாமல், அவர் 2011-இல் பைனான்சியல் டைம்ஸின் வணிகப் பட்டியலில் முதல் 50 பெண்களில் இடம்பெற்றார்.
ஃபோர்ப்ஸ் 2019 ஆம் ஆண்டில் உலகளவில் 68 வது மிகவும் சக்திவாய்ந்த பெண்ணாக அங்கீகரிக்கப்பட்டார். மேலும் 2020 ஆம் ஆண்டில், அவர் ஆண்டின் EY உலக தொழில்முனைவோராக கௌரவிக்கப்பட்டார். தற்போது, ஃபோர்ப்ஸ் 2023 ஆம் ஆண்டின் சக்திவாய்ந்த பெண்களின் பட்டியலில் அவர் 76 வது இடத்தைப் பிடித்துள்ளார்.
முதல் மூன்று இடங்கள் :
மேலும், ஃபோர்ப்ஸ், 2023ம் ஆண்டிற்கான உலகின் மிகவும் சக்திவாய்ந்த பெண்களின் வருடாந்திர பட்டியலில் மிகவும் சக்திவாய்ந்த பெண்ணாக, ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன், முதலிடத்தைப் பிடித்துள்ளார். ஐரோப்பிய மத்திய வங்கியின் முதலாளி கிறிஸ்டின் லகார்ட் இரண்டாவது இடத்திலும், அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் மூன்றாவது இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.