முன்னாள் மத்திய அமைச்சர் சல்மான் குர்ஷித் மனைவிக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மத்திய அரசால் சேவைப்பணிகளுக்காக வழங்கப்பட்ட நிதியில் முறைகேடு செய்ததாக முன்னாள் மத்திய அமைச்சரும்,காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சல்மான் குர்ஷித்தின் மனைவி லூயிஸ் குர்ஷித்க்கு பிணையில் வெளிவர இயலாத வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அறக்கட்டளை – ரூ .71.50 லட்சம் மானியம்:
உத்திரபிரதேசத்தின் 17 மாவட்டங்களில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு சக்கர நாற்காலிகள், மூன்று சக்கர வாகனங்கள் மற்றும் செவிப்புலன் கருவிகளை வழங்குவதற்காக 2010 மார்ச் மாதத்தில்,லூயிஸ் நடத்தி வரும் டாக்டர் ஜாகிர் உசேன் அறக்கட்டளை மத்திய அரசிடமிருந்து ரூ .71.50 லட்சம் மானியம் பெற்றது.
இதனையடுத்து,2012 ஆம் ஆண்டில் அறக்கட்டளையின் அலுவலர்கள் மீது ஊழல் மற்றும் மோசடி குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.அப்போது,குர்ஷித் மத்திய அமைச்சராக இருந்தார்.
இதனால்,பொருளாதார குற்ற பிரிவு விசாரணையைத் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து ஜூன் 2017 இல், EOW இன்ஸ்பெக்டர் ராம் ஷங்கர் யாதவ்,கயம்கஞ்ச் காவல் நிலையத்தில் லூயிஸ் குர்ஷித் மற்றும் பாரூக்கி ஆகியோருக்கு எதிராக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்தார்.
குற்றப்பத்திரிகை:
இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை 2019 டிசம்பர் 30 அன்று நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.அதில்,மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக உத்திரபிரதேசத்தின் மூத்த அதிகாரிகளின் கையொப்பங்கள் போலியானவை என்றும் அவற்றின் போலி முத்திரைகள் மத்திய அரசிடமிருந்து மானியங்களைப் பெற பயன்படுத்தப்பட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.
ஆனால்,இதனை அறக்கட்டளை மறுத்து எட்டாவா, ஃபாரூகாபாத், காஸ்கஞ்ச், மெயின்பூரி, அலிகார், ஷாஜகான்பூர், மீரட், பரேலி, மொராதாபாத், ராம்பூர், சாந்த் கபீர் நகர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான முகாம்களை ஏற்பாடு செய்துள்ளதாகவும்,குழந்தைகள் உபகரணங்கள் விநியோகிக்கப்பட்டதாகவும்,அதனை,அறக்கட்டளையின் இயக்குநர் லூயிஸ் குர்ஷித் அதை மே 2010 இல் சரிபார்த்ததாகவும் அறக்கட்டளை தெரிவித்துள்ளது.
இருப்பினும், ஊனமுற்றோருக்கான முகாம்கள் நடத்தப்பட்டது என்பது பேப்பரில் மட்டுமே தெரிவிக்கப்பட்டு இருப்பதாக புகார் எழுந்தது.
நீதிமன்ற தீர்ப்பு:
இந்நிலையில்,இந்த வழக்கை விசாரித்த உத்திரபிரதேச மாநிலத்தின் பருக்காபாத் நீதிமன்றம்,லூயிஸ் குர்ஷித்க்கு பிணையில் வெளிவர முடியாத வாரண்ட் பிறப்பித்துள்ளது.மேலும்,ஆகஸ்ட் 16ம் தேதி நேரில் ஆஜராகவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.