#BREAKING: அமரீந்தர் சிங் புதிய கட்சி துவங்க உள்ளதாக அறிவிப்பு ..!
பஞ்சாப் முன்னாள் முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங் தனிக்கட்சி தொடங்குவதாக அறிவித்துள்ளார்.
பஞ்சாப் முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங்கிற்கும், முன்னாள் அமைச்சரும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான நவ்ஜோத் சிங் சித்து இடையே ஏற்பட்ட மோதல்போக்கு காரணமாக முதல்வர் பதவியை அமரீந்தர் சிங் ராஜினாமா செய்தார். பின்னர், அமித்ஷாவை சந்தித்து அமரீந்தர் சிங் பேசியதால் பாஜகவில் இணைப்போவதாக கூறப்பட்டது.
பிறகு அமிரீந்தர் சிங் தனிக்கட்சி தொடங்கவுள்ளதாகவும், வரும் சட்டப்பேரவை தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைத்து அமரீந்தர் சிங் தேர்தலை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில், முதல்வர் பதவியை கேப்டன் அமரீந்தர் சிங் ராஜினாமா செய்ததில் இருந்து, இந்த விவகாரம் குறித்து தொடர்ந்து யூகங்கள் எழுந்தன. இன்று சண்டிகரில் செய்தியாளர் சந்திப்பின் போது அமரீந்தர் சிங் தனிக்கட்சி தொடங்குவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
அவர் தனது கட்சியின் பெயரை இதுவரை வெளியிடவில்லை. மேலும், கட்சிக்கான பெயர், சின்னம் விரைவில் அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். பஞ்சாப் மக்களுக்கு வாக்குறுதியளித்த தனது தேர்தல் வாக்குறுதிகளில் பெரும்பாலானவற்றை நிறைவேற்றியுள்ளோம் என்றார். 4.5 வருடங்களில் நான் இருந்தபோது (முதல்வர் நாற்காலியில்) நாங்கள் என்ன சாதித்தோம் என்பது குறித்த ஆவணங்கள் அனைத்தும் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. நான் பொறுப்பேற்ற போது இது எங்களின் தேர்தல் அறிக்கை. நாம் என்ன சாதித்தோம் என்பதற்கான ஆவணமும் உள்ளது என தெரிவித்தார்.