பாஜக ஆட்சியின் மீது முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் குற்றச்சாட்டு.!
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த பின் 2 லட்சம் வேலைவாய்ப்புகளை கூட உருவாக்கவில்லை என்று குற்றம்சாட்டியுள்ளார்.
காங்கிரசின் முழு அமர்வு மாநாடு டெல்லியில் இரண்டாம் நாளாக நடைபெற்று வருகிறது. இதில் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் 14 ஆயிரம் பேர் பங்கேற்றுள்ளனர். மாநாட்டில் இன்று பேசிய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், பா.ஜ.க.வின் மோசமான நிர்வாகம் காரணமாக ஜம்மு காஷ்மீரின் நிலை முன்பு எப்போதும் இல்லாத வகையில் நாளுக்கு நாள் மோசமாகி வருவதாக குற்றம்சாட்டினார்.மேலும் மக்களுக்கு பா.ஜ.க வின் ஆட்சியில் அதிருப்தி ஏற்பட்டதாகவும் கூறினார்.
இதனால் எல்லையில் மட்டும் அல்லாமல் எல்லைக்குள்ளாகவும் பாதுகாப்பின்மை அதிகரித்து இருப்பதாக மன்மோகன் சிங் புகார் கூறினார். 2 கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கி தரப்படும் என்று கூறி மோடி ஆட்சிக்கு வந்ததாகக் கூறிய அவர், ஆனால் தற்போது வரை 2 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவானதைக் கூட பார்க்க முடியவில்லை என்றும் குற்றம்சாட்டினார்.