முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடலுக்கு யமுனை நதிக்கரையில் இறுதிச் சடங்கு.!
யமுனை நதிக்கரையில் உள்ள நிகாம்போத் காட்டில் மன்மோகன் சிங்கின் இறுதிச் சடங்கு முழு அரசு மரியாதையுடன் இன்று நடைபெறுகிறது.
டெல்லி: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல்நல குறைவு காரணமாக, நேற்று முன்தினம் காலமானார். இப்பொது மறைந்த மன்மோகன் சிங் உடல் அஞ்சலிக்காக டெல்லியில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. அரசியல் தலைவர்கள் நேரிலும் சென்று தங்களுடைய அஞ்சலியை செலுத்தினர்.
அதன்படி, பிரதமர் மோடி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி இருந்தார்கள். இதனையடுத்து, மன்மோகன் சிங்கின் இறுதிச்சடங்கு இன்று பிற்பகல் டெல்லியின் யமுனை ஆற்றின் கரையில் அமைந்துள்ள நிகம்போத் காட்டில் நடைபெற உள்ளது. இறுதிச் சடங்குகளை ராணுவ மரியாதையுடன் நடத்த மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது.
முதலில் அவரது உடல் அவரின் இல்லத்தில் இருந்து காங்கிரஸ் அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, மக்கள் பார்வையிடுவதற்காக சிறிது நேரம் அங்கே வைக்கப்படுகிறது. பின்னர், அங்கிருந்து நிகம்போத் காட் கொண்டு செல்லப்படுகிறது.
இதனிடையே, மன்மோகன் சிங்குக்கு நினைவிடம் அமைப்பது தொடர்பாக பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கடிதம் எழுதி இருந்தார். இதையடுத்து, நினைவிடம் அமைக்க அரசு இடம் ஒதுக்கும் என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.