பாஜகவில் இணைந்தார் மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் அசோக் சவான்!
நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பிரதான தேசிய கட்சிகளான பாஜக, காங்கிரஸ் மும்மரமாக செயல்பட்டு வருகிறது. இந்த சூழலில், மகாராஷ்டிர முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் தலைவருமான அசோக் சவான் அக்கட்சியில் இருந்து விலகுவதாக நேற்று அறிவித்திருந்தார்.
ஏற்கனவே, அம்மாநிலத்தை சேர்ந்த காங்கிரஸ் முக்கிய தலைவர்கள் மிலிந்த் தியோரா, பாபா சித்திக் ஆகியோர் சமீபத்தில் கட்சியில் இருந்து விலகியதை தொடர்ந்து அசோக் சவானும் விலகி இருப்பது அக்கட்சிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகினார் மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் அசோக் சவான்!
2008 டிசம்பரில் இருந்து 2010 நவம்பர் வரை மகாராஷ்டிராவில் காங்கிரஸ் கட்சியின் முதல்வராக பதவி வகித்த அசோக் சவான், 2014 முதல் 2019 வரை மகாராஷ்டிரா மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவராகவும் பொறுப்பு வகித்துள்ளார். காங்கிரஸில் இருந்து விலகிய அசோக் சவான், விரைவில் அவர் ஆதரவு எம்எல்ஏக்களுடன் பாஜகவில் இணைய உள்ளதாகவும் தகவல் வெளியானது.
இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியில் இருந்து நேற்று விலகிய அசோக் சவான், பாஜகவில் இணைந்தார். மராட்டிய துணை முதல்வர் தேவேந்திர பட்நவீஸ் முன்னிலையில் பாஜகவில் ஐக்கியமானார். மேலும், பாஜக சார்பில் மகாராஷ்ட்ராவில் இருந்து மாநிலங்களவைக்கு அசோக் சவான் போட்டியிட உள்ளதாகவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.