ஜார்கண்ட் மாநில நம்பிக்கை வாக்கெடுப்பு.! சட்டசபை வந்தடைந்தார் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன்.!
ஜார்கண்ட் மாநில முதல்வராக பொறுப்பில் இருந்த ஹேமந்த் சோரனை. சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத்துறையினர் கைது செய்தனர். அமலாக்கத்துறை விசாரணைக்கு செல்வதற்கு முன்னரே ஹேமந்த் சோரன் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டார். தற்போது அவர் விசாரணை காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
இதனை அடுத்து, ஜார்கண்ட் மாநில புதிய முதல்வராக, மாநில போக்குவரத்து துறை அமைச்சராக பொறுப்பில் இருந்த சம்பாய் சோரன் தேர்வு செய்யப்பட்டு, ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா , காங்கிரஸ் மற்றும் ராஷ்டிரிய ஜனதா தள கட்சி எம்எல்ஏக்கள் ஆதரவுடன் மாநில முதல்வராக பதவி ஏற்றுக்கொண்டார்.
பாஜக எம்பிகளுக்கு வேண்டுகோள்! இன்று மக்களவையில் பிரதமர் மோடி உரை!
ஜார்கண்ட் மாநில 12வது முதல்வராக பதவியேற்ற சம்பாய் சோரன், 10 நாட்களுக்குள் தனது பெரும்பான்மையை சட்டப்பேரவையில் நிரூபிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதனை அடுத்து இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது அதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றன.
இந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க , ஜார்கண்ட் மாநில சட்டமன்ற உறுப்பினர் ஹேமந்த் சோரணை காவல்துறையினர் சட்டசபைக்கு அழைத்து வந்தனர். இதனை தொடர்ந்து தற்போது நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்று வருகிறது. இதில் பெரும்பான்மை நிரூபிக்கப்பட்டால் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சாவை சேர்ந்த சம்பாய் சோரன் ஜார்கண்ட் மாநில 12வது முதல்வராக தொடர்வார்.
81 தொகுதிகள் கொண்ட ஜார்கண்ட் மாநில சட்டப்பேரவைக்கு , பெரும்பான்மை நிரூபிக்க 41 சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவு தேவை. சம்பாய் சோரனுக்கு ஜார்கண்ட் முத்தி மோர்ச்சா, காங்கிரஸ் , ராஷ்டிரிய ஜனதா தளம் என மொத்தம் 47 உறுப்பினர்கள் ஆதரவு இருக்கிறது. அதில் 43 பேர் உறுதியாக ஆதரவு அளிப்பார்கள் என கூறப்படுகிறது. முன்னதாக எம்எல்ஏக்கள் கட்சி தாவல் நடைபெற்றுவிட கூடாது என கூட்டணி எம்எல்ஏக்கள் அனைவரும் ஹைதிராபாத் அழைத்து செல்லப்பட்டு நேற்று தான் ஜார்கண்ட் மாநிலம் வந்தடைந்தனர் என்பது குறிப்பித்தக்கது.