புல்வாமா தாக்குதல்.! அமைதியாக இருக்க பிரதமர் மோடி கூறினார்.! முன்னாள் ஆளுநர் பரபரப்பு பேட்டி.!
புல்வாமா தாக்குதல் பற்றி அமைதியாக இருக்கும்படி, பிரதமர் மோடி தன்னிடம் கூறினார் என ஜம்மு காஷ்மீர் முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக் பேட்டியளித்துள்ளார்.
கடந்த 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14ஆம் தேதி ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் நடந்த புல்வாமா தாக்குதலை தற்போது வரை இந்தியர்கள் மறந்திருக்க மாட்டார்கள. ஏனென்றால் ஒரே நேரத்தில் 40 ராணுவ வீரர்கள் பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு உள்ளாகி வீரமரணம் அடைந்தனர் . இந்த தாக்குதல் குறித்து அப்போதைய ஜம்மு-காஷ்மீர் மாநில ஆளுநராக பதவியில் இருந்த சத்தியபால் மாலிக் பல்வேறு அதிர்ச்சி தகவல்களை அண்மையில் ஓர் தனியார் செய்தி நிறுவனத்திற்கு பேட்டியாக அளித்துள்ளார்.
அந்த பேட்டி தற்போது மிகவும் வைரலாக பரவி வருகிறது. மேலும், காங்கிரஸ் கட்சி அதனை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து, பிரதமர் மோடி குறித்தும், பாஜக அரசு குறித்தும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகிறது.
மாலிக் பேட்டி :
ஜம்மு காஷ்மீர் மாநில முன்னாள் ஆளுநர் மாலிக், தனியார் செய்தி நிறுவனத்திடம் பேட்டி கூறுகையில், புல்வாமாவில், மத்திய ரிசர்வ் போலீஸ் படை(CRBF) வீரர்களின் மீதான தாக்குதல் மத்திய உள்துறை அமைச்சகத்தில் திறமையின்மையின் விளைவு என கடுமையாக சாடினார். அப்போது மத்திய உள்துறை அமைச்சராக இருந்தவர் ராஜ்நாத் சிங் ஆவார்.
விமானம் மறுப்பு :
மேலும், அந்த புல்வாமா தாக்குதல் நடைபெறுவதற்கு முன்னர் ராணுவ வீரர்களை அழைத்து செல்வதற்கு மத்திய உள்துறை அமைச்சகத்திடம் இருந்து விமானம் கேட்கப்பட்டது என்று கூறினார். ஆனால் ,மத்திய உள்துறை அமைச்சகம் விமானத்தை தர மறுத்து சாலை மார்க்கமாக செல்லும்படி உத்தரவிட்டதன் காரணமாகவே, சிஆர்பிஎப் வீரர்கள் சாலை மார்க்கமாக சென்றார்கள் என்றும், சாலை மார்க்கமாக வீரர்கள் பகுதிகளிலும், பாதுகாப்பு அவர்களுக்கு திறம்பட ஏற்பாடு செய்யப்படவில்லை என்பதையும் மாலிக் குற்றம் சாட்டினார்.
பிரதமர் மோடி வேண்டுகோள் :
புல்வாமா தாக்குதல் சம்பவத்தை அடுத்து பிரதமர் மோடி ஜம்மு காஷ்மீர் பயணம் மேற்கொண்ட போது, பிரதமரிடம் இதுகுறித்து தான் கேள்வி எழுப்பியதாகவும், ஆனால் அப்போது பிரதமர், ‘இதைப் பற்றி வெளியே யாரிடமும் கூற வேண்டாம்.’ எனவும், ‘அமைதியாக இருக்குமாறு’ கேட்டுக் கொண்டார் எனவும் அதிர்ச்சி தகவலை ஜம்மு காஷ்மீர் முன்னாள் ஆளுநர் மாலிக் அந்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
பாகிஸ்தான் வெடிமருந்து :
மேலும், பாகிஸ்தான் நாட்டிலிருந்து பயங்கரவாதிகள் வெடிமருந்துகளுடன் ஜம்மு காஷ்மீருக்குள் ஒரு வார காலமாக சுற்றித்திரிந்ததாகவும், ஆனால், அதனை உளவுத்துறை சரிவர கவனிக்காமல் இருந்ததாகவும் முன்னாள் ஆளுநர் மாலிக் பரபரப்பு குற்றச்சாட்டை மத்திய உளவுத்துறை மீது வைத்தார். இந்த தாக்குதல் உளவுத்துறையின் தோல்வி எனவும் மாலிக் குறிப்பிட்டார். .
காங்கிரஸ் குற்றசாட்டு :
இந்த குற்றச்சாட்டுகளை காங்கிரஸ் கட்சி தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் ஆளுநர் மாலிக் கூறிய குற்றச்சாட்டுகளை பதிவிட்டு, 2019 நாடாளுமன்ற தேர்தலைக்காக தனது புகழை காப்பாற்றுவதற்காக புல்வாமா தாக்குதல் சம்பவத்தை பிரதமர் மோடி ‘அடக்கி’ விட்டார் என்று குற்றம் சாட்டியது. மேலும், 40 சிஆர்பிஎப் வீரர்களின் தியாகம் அரசாங்கத்தின் தவறு என்றும் குற்றம் சாட்டியது.
அதிர்ச்சி :
மேலும், அப்போது வீரர்களுக்கு விமானம் கிடைத்திருந்தால், தீவிரவாத சதி தோல்வி அடைந்திருக்கும். இந்த சம்பவத்தை பிரதமர் மோடி, மறைத்தது மட்டுமல்லாமல்அவரது புகழை காப்பாற்றுவதற்கான வேலைகளில் ஈடுபட்டார். புல்வாமா தாக்குதல் குறித்து சத்திய பால் மாலிக்கின் அறிக்கை கேட்டு நாடு முழுவதும் அதிர்ச்சி அடைந்துள்ளது என ட்விட்டர் பக்கத்தில் காங்கிரஸ் கட்சி கடுமையாக விமர்சனங்களை முன்வைத்துள்ளது.