ஹரியானா முன்னாள் முதல்வர் ஓம் பிரகாஷ் சௌதாலா மறைந்தார்!
ஹரியானா மாநிலத்தின் முன்னாள் முதல்வர் ஓம் பிரகாஷ் சவுதாலா (89) காலமானார்.
ஹரியானா: இந்திய தேசிய லோக் தளம் கட்சித் தலைவரும், ஹரியாணா முன்னாள் முதல்வருமான ஓம் பிரகாஷ் சௌதாலா(89) மாரடைப்பால் காலமானார். ‘இந்திய தேசிய லோக் தள்’ கட்சியின் தலைவரான அவர், 4 முறை ஹரியானா மாநிலத்தின் முதல்வராக இருந்துள்ளார்.
அது மட்டும் இல்லாமல், ஏழு முறை எம்.எல்.ஏவாகவும் இருந்திருக்கிறார். இவர் முன்னாள் துணை பிரதமர் சவுத்ரி தேவி லாலின் மகன் ஆவார். 1989 அன்று முதல் முறையாக முதல்வராக பதவியேற்ற சவுதாலா, கடைசியாக மாநில முதல்வராக 1999ஆம் ஆண்டு முதல் 2005ஆம் ஆண்டு வரை பதவி வகித்தது குறிப்பிடத்தக்கது.
கடந்த மூன்று-நான்கு ஆண்டுகளாக சுவாச கோளாறு காரணமாக சிகிச்சை பெற்று வந்த அவர், இன்று காலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டு, உடனடியாக மேதாந்தாவில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால், அவர் வரும் வழியிலையே உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளன.
இந்நிலையில், அவரது உடல் குருகிராமில் உள்ள அவரது இல்லத்தில், நாளை காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, மாலை 3 மணிக்கு அவரது உடல் தகனம் செய்யப்படும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.