காங்கிரஸிலிருந்து விலகிய கோவா முன்னாள் முதல்வர் திரிணாமுல் காங்கிரஸ் ராஜ்யசபா எம்பியானார்…!
கோவா முன்னாள் முதல்வருமான லூயிசின்ஹோ ஃபலேரோ மேற்கு வங்கத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
கோவாவின் முன்னாள் முதல்வர், 7 முறை எம்.எல்.ஏ மற்றும் கோவாவின் பெரிய அரசியல் முகமான லூய்சின்ஹோ பலேரோ இந்த ஆண்டு செப்டம்பரில் காங்கிரஸில் இருந்து விலகி, சட்டமன்ற உறுப்பினர் பதவியையும் ராஜினாமா செய்தார். இதற்குப் பிறகு, பாஜக மற்றும் அதன் பிளவுபடுத்தும் கொள்கைகளை தோற்கடிப்பேன் என்று கூறி திரிணாமுல் காங்கிரஸில் இணைந்தார்.
திரிணாமுல் காங்கிரஸ் அவரை கட்சியின் தேசிய துணைத் தலைவராக்கியது. மேலும் அவரை ராஜ்யசபாவுக்கு அனுப்புவதாக அறிவித்தது. அதே மாதத்தில், மேற்கு வங்க மாநிலத்தின் ராஜ்யசபா தொகுதிக்கான இடைத்தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளராக லூய்சின்ஹோ பலேரோவை அறிவித்தது. பின்னர், ராஜ்யசபா தேர்தலுக்கான வேட்புமனுவை லூய்சின்ஹோ பலேரோ தாக்கல் செய்தார்.
திரிணாமுல் காங்கிரஸ் எம்பி அர்பிதா கோஷ் ராஜினாமா செய்ததையடுத்து காலியாக இருந்த அந்த இடத்த்திற்கு நவம்பர் 29-ஆம் தேதி தேர்தல் நடைபெற இருந்தது. இருப்பினும், ஃபலேரி ராஜ்யசபா எம்.பி.யாக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். ஃபலேரோவை கட்சியில் சேர்த்துவிட்டு இப்போது ராஜ்யசபாவுக்கு அனுப்புவது கோவாவில் கட்சி அமைப்பை பலப்படுத்தும் மம்தா பானர்ஜியின் முயற்சியாக பார்க்கப்படுகிறது.
அடுத்த ஆண்டு நடைபெற உள்ள கோவா சட்டசபை தேர்தலில் போட்டியிட திரிணாமுல் காங்கிரஸ் தயாராகி வருகிறது. இதுபோன்ற சூழ்நிலையில், மாநிலத்தின் பல தலைவர்கள் கட்சியில் சேர்க்கப்பட்டு, முக்கிய பதவிகளையும் வழங்கி வருகின்றனர்.