#GujaratElection2022: காங்கிரஸில் இணைந்த பாஜக முன்னாள் அமைச்சர்!
குஜராத் தேர்தலுக்கு முன்னதாக பாஜக முன்னாள் அமைச்சர் ஜெய் நாராயண் வியாஸ் காங்கிரஸில் இணைந்தார்.
பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் 182 இடங்களை கொண்ட சட்டசபைக்கு டிசம்பர் 1 மற்றும் 5 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. முதல்கட்டமாக 89 தொகுதிகளில் டிசம்பர் 1-ம் தேதி தேர்தல் நடப்பதால் பிரச்சாரம் உச்சகட்டத்தை அடைந்து வருகிறது.
குஜராத்தில் முதல் கட்டமாக தேர்தல் டிசம்பர் 1-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், 89 தொகுதிகளில் நாளை பிரசாரம் ஓய்கிறது. இந்த நிலையில், பாரதீய ஜனதா கட்சியில் இருந்து கடந்த நவம்பர் 5-ஆம் தேதி ராஜினாமா செய்த குஜராத் முன்னாள் அமைச்சர் ஜெய் நாராயண் வியாஸ் இன்று காங்கிரஸில் இணைந்தார்.
அகமதாபாத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே முன்னிலையில் ஜெய் நாராயண் வியாஸ் கட்சியில் இணைந்து கொண்டார். பிரதமர் நரேந்திர மோடி முதல்வராக இருந்தபோது குஜராத்தில் பாஜக ஆட்சியில் அமைச்சராக இருந்தவர் வியாஸ். இந்த சமயத்தில் குஜராத் சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்னதாக, பாஜக முன்னாள் அமைச்சர் ஜெய் நாராயண் வியாஸ் காங்கிரஸில் இணைந்திருப்பது பாஜகவுக்கு சற்று பின்னடைவாக பார்க்கப்படுகிறது.