பலவருடங்களாக ஐ.பி.எல். சூதாட்டத்தில் ஈடுபட்ட பாலிவுட் நடிகர்..!
ஐ.பி.எல். சூதாட்டத்தில் ஈடுபட்ட பாலிவுட் நடிகர் அர்பாஸ் கான் பணம் தருவதற்கு பதிலாக, பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்குமாறு, சூதாட்ட கும்பலின் தலைவன் வற்புறுத்திய தகவல் வெளியாகியுள்ளது.
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை மையமாக வைத்து, மகாராஷ்டிராவில் சூதாட்டம் நடைபெற்றதாக கிடைத்த தகவலின்பேரில், சூதாட்ட கும்பலின் தலைவன் சோனு ஜலான் என்பவனை போலீசார் கைது செய்தனர்.
சோனு ஜலான் கைப்பட எழுதிய டைரியையும் பறிமுதல் செய்த போலீசார், அதை ஆய்வுக்குட்படுத்தினர். அதன் அடிப்படையில் நடிகர் சல்மான் கானின் தம்பியும், திரைப்பட நடிகருமான அர்பாஸ் கானை அழைத்து, சோனு ஜலானை நேருக்குநேர் வைத்து விசாரணை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. அப்போது, சோனு ஜலானுடன் பழக்கம் ஏற்பட்டதில் இருந்து, கடந்த 7 ஆண்டுகளுக்கும் மேலாக ஐ.பி.எல். சூதாட்டத்தில் நடிகர் அர்பாஸ்கான் ஈடுபட்ட தகவல் தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது.
பணத்திற்கு பதிலாக, அர்பாஸ் கானை பல்வேறு பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்க வைத்த சூதாட்ட தலைவன் சோனு ஜலான், அதன்மூலம் பல்வேறு பிரபலங்களுடன் நட்பை ஏற்படுத்தி, அவர்களையும் சூதாட்ட வலையில் வீழ்த்தியுள்ளதாகவும் போலீசார் தெரிவிக்கின்றனர்.
பாரில் நடனமாடும் 2 பெண்களின் உதவியுடன் பாலிவுட் பிரபலங்களையும், தொழிலதிபர்களையும் சூதாட்டத்தில் சிக்க வைத்த சோனு ஜலான், ஆயிரத்து 200க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களை வைத்திருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.