மக்களவையை தொடர்ந்து இன்று மாநிலங்களவையில் தாக்கலாகும் டெல்லி சர்வீசஸ் மசோதா!

Delhi Service Bill Debate

டெல்லியில் மூத்த ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் நியமனம் மற்றும் பணியிட மாற்றம் செய்வது தொடர்பான அதிகாரங்களை வழங்கும் டெல்லி அவசர சட்டத்திற்கு மாற்றான (டெல்லி சேவைகள் மசோதா) கடந்த 3ம் தேதி நாடாளுமன்ற மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவை மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்தியானந்த் ராய் மக்களவையில் தாக்கல் செய்தார்.

அவசர சட்டத்துக்கு மாற்றாக உருவாக்கப்பட்ட டெல்லி சேவைகள் மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து, ஆம் ஆத்மி உள்பட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர். எதிர்க்கட்சிகள் அமளிக்கு மத்தியில், மசோதா மீதான விவாதம் மக்களவையில் காரச்சார நடைபெற்றது.

டெல்லி அதிகாரிகள் நியமன சட்டத்தை இயற்றும் உரிமை மத்திய அரசுக்கு இருக்கிறது என்றும் யூனியன் பிரதேசங்களில் ஏற்படும் பிரச்னைகளை தீர்க்கவும், சட்டம் இயற்றவும் நாடாளுமன்றத்திற்கு அதிகாரம் உள்ளது எனவும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியிருந்தார். இதன்பின் டெல்லியில் அதிகாரிகள்  நியமனம், பணியிட மாற்றம் செய்வது தொடர்பான அதிகாரங்களை வழங்கும் டெல்லி அவசர சட்டத்திற்கு மாற்றான மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.

எதிர்க்கட்சிகளின் வெளிநடப்புக்கு இடையே 4 மணி நேர விவாதத்துக்குப் பிறகு கடந்த வியாழக்கிழமை மக்களவையில் மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று நாடாளுமன்ற மாநிலங்களவையில் டெல்லி அதிகாரிகள் நியமனம் தொடர்பான டெல்லி சேவைகள் மசோதாவை அறிமுகப்படுத்த உள்ளார். டெல்லி சேவைகள் மசோதா மக்களவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்ட நிலையில், இன்று மாநிலங்களவையில் தாக்கல் செய்ய உள்ளது மத்திய அரசு.

இதனால், இந்த மசோதாவை எதிர்த்து எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட வாய்ப்பு உள்ளது. இந்த அவசரச் சட்டத்திற்கு எதிராக எதிர்க்கட்சிகளின் ஆதரவைக் கோரி வரும் காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகள், இன்றும், நாளையும் அவையில் இருக்குமாறு ராஜ்யசபா உறுப்பினர்களுக்கு கொறடா உத்தரவு வழங்கியுள்ளன என்பது குறிப்பிடப்படுகிறது.

மாநிலங்களவையில் ஆளும் என்டிஏ கூட்டணி 100 எம்பிக்களைக் கொண்டுள்ளது, மேலும் பிஜேடி மற்றும் ஒய்எஸ்ஆர்சிபியும் இந்த மசோதாவுக்கு ஆதரவளிப்பதாக அறிவித்துள்ளன. 238 உறுப்பினர்களைக் கொண்ட சபையில் பரிந்துரைக்கப்பட்ட உறுப்பினர்கள் மற்றும் சில சுயேட்சைகள் இதற்கு ஆதரவளிக்கவும் வாய்ப்புள்ளது. மேல்சபையில் மசோதாவை நிறைவேற்றுவதற்கான பெரும்பான்மைக்கு 119 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. மறுபுறம், காங்கிரஸ் உட்பட ஆம் ஆத்மிக்கு ஆதரவு தெரிவித்த அனைத்து கட்சி உறுப்பினர்கள் 105 ஆகும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்