தமிழ்நாட்டைத் தொடர்ந்து, புதுச்சேரியிலும் ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்து புறக்கணிப்பு…!
தமிழ்நாட்டைத் தொடர்ந்து, புதுச்சேரியிலும் ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்து புறக்கணிப்பு.
தமிழ் புத்தாண்டையொட்டி தேநீர் விருந்தில் பங்கேற்குமாறு அரசியல் கட்சிகளுக்கு தமிழக ஆளுநர் அழைப்பு விடுத்திருந்தார். திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் தேநீர் விருந்தில் பங்கேற்கமாட்டோம் என தெரிவித்தனர். ஆளுநரின் தேநீர் விருந்தில் அதிமுக, பாஜக, பாமக உள்ளிட்ட கட்சிகள் கலந்து கொண்டனர்.
ஆளுநரின் தேநீர் விருந்தில் திமுகவின் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், மதிமுக, விசிக, சிபிஎம், சிபிஐ, தவக உள்ளிட்ட கட்சிகள் நிராகரித்தது. நீட் மசோதாவை ஜனாதிபதிக்கு அனுப்பாமல் தாமதம் செய்வதை கண்டித்து இந்த தேநீர் விருந்தை திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் புறக்கணித்துள்ளது.
இந்த நிலையில், புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் அளிக்கும் தேநீர் விருந்தை காங்கிரஸ் புறக்கணித்துள்ளது. மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன், புதுச்சேரி ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக தெரிவித்தார். புதுச்சேரிக்கு ஒரு நிரந்தர துணைநிலை ஆளுநரை நியமிக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியது.