கால்நடை தீவன வழக்கில் பீகார் முன்னால் முதல்வர் லாலு மற்றும் ஜெகன்நாத் மிஸ்ரா உள்ளிட்டோருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.
ஒன்றுபட்ட பிஹார் மாநில முதல்வராக 1990 முதல் 1997 வரை லாலு பதவி வகித்தபோது, கால்நடை தீவன திட்டத்தில் ஊழல் நடந்தது தெரிய வந்தது. இதில் லாலு மீது 5 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்குகளை 1996 முதல் சிபிஐ விசாரித்து வருகிறது. இதன் முதல் வழக்கில் 2013-ல் லாலுவுக்கு 5 ஆண்டு தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து சிறையில் அடைக்கப்பட்ட லாலு, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து ஜாமீன் பெற்றார்.
இதன் 2-வது வழக்கில் லாலு, மற்றொரு முன்னாள் முதல்வர் ஜெகன்நாத் மிஸ்ரா உள்ளிட்ட 34 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டது. லாலு, 3 முன்னாள் ஐஏஎஸ் அதிகாரிகள் உள்ளிட்ட 16 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர். லாலுவுக்கு மூன்றரை ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் ஜெகன்நாத் மிஸ்ரா உள்ளிட்ட 6 பேர் விடுவிக்கப்பட்டனர்.
இந்நிலையில் லாலு மற்றம் ஜெகன்நாத் மிஸ்ரா உள்ளிட்டோர் மீதான கால்நடைத் தீவன 3-வது ஊழல் வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
ஜார்கண்ட் மாநிலம் சாய்பாசா அரசு கருவூலத்தில் இருந்து 33.67 கோடி ரூபாய் தவறான முறையில் பணப் பரிமாற்றம் செய்ததாக வழக்கு தொடரப்பட்டது. இதில் 56 பேர் மீதான வழக்கில் சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி எஸ்எஸ் பிரசாத் இன்று தீர்ப்பளித்தார்.
இந்த வழக்கில் லாலு, ஜெகன்நாத் மிஸ்ரா உள்ளிட்டோர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளதால், அவர்கள் குற்றவாளி என அறிவித்ததார். இந்த வழக்கில் 6 பேர் விடுவிக்கப்பட்டனர். சில மணிநேரம் கழித்து அவர்களுக்கான தண்டனை விவரமும் அறிவிக்கப்பட்டது. லாலு மற்றும் ஜெகன்நாத் மிஸ்ரா உள்ளிட்டோருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.
இதனிடையே, இந்த வழக்கில் மேல்முறையீடு செய்யப்படும் என லாலுவின் மகனும், முன்னாள் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவ் தெரிவித்தார்.
மேலும் செய்திகளுக்கு தினசுவடுடன் இணைந்திருங்கள் ….