வெள்ள பாதிப்பு:அனைத்து குடும்பங்களுக்கும் அரிசி,பருப்பு,சமையல் எண்ணெய் போன்ற அத்தியாவசிய பொருட்கள் இலவசம் – அரசு அறிவிப்பு!
ஆந்திரா:வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து குடும்பங்களுக்கும் அரிசி, பருப்பு போன்ற அத்தியாவசியப் பொருட்களை இலவசமாக வழங்க ஆந்திர அரசு முடிவு செய்துள்ளது.
ஆந்திரப்பிரதேசத்தில் கடந்த இரண்டு வாரமாக கனமழை பெய்து வருகிறது.குறிப்பாக,சித்தூர், கடப்பா, நெல்லூர் மற்றும் அனந்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் தொடர்ந்து பெய்து வரும் அதிக கனமழையால்,குடியிருப்பு பகுதிகளுக்குள் வெள்ளம் புகுந்து மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது.
இதனையடுத்து,நெல்லூர் மாவட்டத்தில் மழை வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி ஹெலிகாப்டர் மூலம் வான்வழி ஆய்வு செய்தார்.இதனைத் தொடர்ந்து,தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படை குழுக்கள்,மீட்பு நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
இதனைத் தொடர்ந்து,மழை வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளான சித்தூர், கடப்பா, நெல்லூர், அனந்பூர் மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.மேலும்,மழை காரணமாக இதுவரை 24 பேர் உயிரிழந்ததாகவும்,காணாமல் போன 18 பேரை தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில்,சித்தூர்,நெல்லூர், கடப்பா மற்றும் அனந்தபூர் மாவட்டங்களில் வெள்ள நிலைமை குறித்த ஆய்வுக் கூட்டத்திற்குப் பிறகு, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து குடும்பங்களுக்கும் அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய், வெங்காயம், உருளைக்கிழங்கு போன்ற அத்தியாவசியப் பொருட்களை இலவசமாக வழங்க ஆந்திர அரசு முடிவு செய்துள்ளது.
இது தொடர்பாக ஆந்திர அரசு வெளியிட்டுள்ள உத்தரவில் கூறப்பட்டிருப்பதாவது:
“21.11.2021 அன்று நெல்லூர், சித்தூர், அனந்தபுரம் மற்றும் ஒய்எஸ்ஆர் கடப்பா மாவட்டங்களில் வெள்ள நிலைமையை ஆந்திர அரசு மதிப்பாய்வு செய்துள்ளது.மேலும்,இந்த மாவட்டங்களில் கனமழை,வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்ட அனைத்து குடும்பங்களுக்கும் அத்தியாவசியப் பொருட்களை விநியோகிக்க ஆய்வுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
அதன்படி,வெள்ள நீரில் மூழ்கி உள்ள வீடுகளில் பாதிக்கப்பட்ட அனைத்து குடும்பங்களுக்கும் அத்தியாவசியப் பொருட்களை இலவசமாக விநியோகிக்க அரசு இதன் மூலம் நிர்வாக அனுமதி அளிக்கிறது. விநியோகத்திற்கான பொருட்கள் பின்வருமாறு:
- அரிசி -25 கிலோ.
- பருப்பு -1 கி.கி.
- சமையல் எண்ணெய் – 1 லிட்டர்(ஒரு குடும்பத்திற்கு)
- வெங்காயம் – 1 கிலோ.
- உருளைக்கிழங்கு – 1 கிலோ.
குடிமைப் பொருள் வழங்கல் ஆணையர் மற்றும் அரசின் முன்னாள் அலுவல் முதன்மைச் செயலர், அரிசி, உளுத்தம் பருப்பு மற்றும் ப.எண்ணெய் ஆகியவற்றை உரிய முறையில் விநியோகிக்கத் தேவையான நடவடிக்கையை உடனடியாக சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்களிடம் இருந்து பெற்று தேவையான முன்மொழிவுகளை சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்”,என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Andhra Pradesh govt after the review meeting on the flood situation in Chittoor, Nellore, Kadapa & Anantapur districts has decided to distribute essential commodities like rice, dal, edible oil, onions, and potatoes to all flood-affected families free of cost pic.twitter.com/ZtwcPGE6k2
— ANI (@ANI) November 21, 2021