இன்று சிபிஎஸ்இ முதல் பருவ பொதுத்தேர்வு- சிபிஎஸ்இ அறிவுறுத்தல்!
சிபிஎஸ்இ 12ம் வகுப்பு மாணவர்களுக்கான முதல் பருவ பொதுத்தேர்வு இன்று தொடங்குகிறது.
கொரோனா காரணமாக சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வுகள் கடந்த ஆண்டு ரத்து செய்யப்பட்டது. அதனால், இந்த ஆண்டு பொதுத் தேர்வை இரு பருவப்பொதுத் தேர்வுகளாக நடத்த சிபிஎஸ்இ அறிவித்தது. அதன்படி, பொதுத் தேர்வு இரண்டாகப் பிரிக்கப்பட்டு முதல் பருவத் தேர்வு நவம்பர் – டிசம்பர் மாதங்களிலும், 2-வது பருவத் தேர்வு மார்ச் – ஏப்ரல் மாதங்களிலும் நடைபெறும் எனவும் தேர்வு 90 நிமிடங்களுக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
ஒவ்வொரு பருவத் தேர்விலும் பாடத்திட்டத்தின் 50 சதவீதப் பகுதியில் இருந்து கேள்விகள் கேட்கப்படும். இதைத்தொடந்து, 10-ஆம் வகுப்பு முதல் பருவத்தேர்வு டிசம்பர் 11-ஆம் தேதி சனிக்கிழமையுடன் நிறைவு பெற்றுள்ளது. இந்நிலையில், சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று முதல் பருவத்தேர்வு தொடங்குகிறது.
இந்த தேர்வு டிசம்பர் 30-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. பருவ தேர்வு நடத்தும் பள்ளிகள் எந்தவிதமான புகாருக்கும் இடம் தராமல் தேர்வை நல்ல முறையில் நடத்த சிபிஎஸ்இ நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.